நீரை விவசாயத்திற்கு தேவையான அளவு பயன்படுத்துவதில் தவறில்லை. அதை விடுத்து அதிகமாக பயன்படுத்தும் பொழுது அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? ஏன் அப்படி அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டி உள்ளது? அப்படி பயன்படுத்தும் போது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? என்பன பற்றி இப்பதிவில் காண்போம்.
இன்றைய நாட்களில் அணைகள், கால்வாய்கள் மூலமாக ஒழுங்குப்படுத்தப்பட்ட முறையில் நீரை தேக்கி முறையாக பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் அவை நிலத்திற்கு கெடுதலையும் சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலையையும் உருவாக்கி வருகிறது. ஏன் அப்படி உருவாக்குகிறது என்றால் நவீன முறை வேளாண்மை தொழிலில் அதிக விளைச்சல் தரும் விதைகளையும், வீரிய ரசாயன உரங்களையும் ,வீரிய பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.
அப்படி பயன்படுத்தும் பொழுது அந்த விளைச்சலை முழுமையான அளவில் பெற நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகமான நீரைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்படி பயன்படுத்தும் பொழுது அந்த அதிகப்படியாக எஞ்சிய தண்ணீர் வயல்களிலும் அதைச் சுற்றியுள்ள பயிரிடப்படாத வெற்றிடங்களிலும் தேங்கி நிற்கின்றது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களை பலவித நோய்களுக்கு ஆளாக்குகிறது. இது சுற்றுச்சூழலை பெரிதும் பாதிப்பதுடன் மண்வளம் குறைவதற்கும் காரணம் ஆகின்றது.
தண்ணீர் அதிகமானால் மண்வளம் எப்படி பாதிக்கப்படும் என்ற கேள்வி வரும். வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் இந்த அதிகப்படியான நீருடன் கலந்து நிலத்தடி நீரை உவர் நீர் ஆக்குகிறது.
இதனால் விளைநிலங்களின் மண்ணில் அமிலத்தன்மை போன்ற ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அவை உவர் நிலங்களாக மாறி, வேளாண்மைக்குப் பயனற்றவையாகி விடுகின்றன. இந்த மாறுபாட்டால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களும் அதனைச் சுற்றி வாழும் விலங்குகளும் மெல்ல மெல்ல அழியத் தொடங்குகின்றன. அப்படி அழியும் போது அந்த மண்ணில் உள்ள இயற்கையான சத்துக்கள் குறைகிறது.
அப்பொழுது மண் தனது கெட்டித் தன்மையை இழந்து விடுகின்றது. பிறகு இப்படிப்பட்ட மண் மணல் குவியலாகவும், வண்டல் படிந்ததாகவும், களிமண்ணாகவும் மாறிவிடுகிறது. இந்த நிகழ்வு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடுகிறது.
இப்படித்தான் அதிகப்படியாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் ஒரு தேக்க நிலையில் இருந்து படிப்படியாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது.
இதனால் வீட்டுத் தோட்டங்களிலும் நீரைப் பயன்படுத்தும் பொழுது அளவோடு பயன்படுத்த வேண்டும். அப்போது நீர் தேங்காததால் கொசு வளராது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை அதிகமாக இட்டால் நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படும். இதனால் மண் பண்படும். மண் பண்பட்டால் நிலம் அதன் இயற்கை தன்மையிலிருந்து மாறுபடாது. பிறகு இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு பாதகமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்கலாம். இதைத் தெரிந்து கொண்டு நாம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பு செய்வோம் ஆக!