

வண்ணமயமான அழகான வானவில் நீர்வீழ்ச்சி ஹவாய் தீவில் உள்ளது. சூரிய ஒளியில் மின்னும் இந்த வானவில் நீர்வீழ்ச்சி உலக சுற்றுலா பயணிகளையும், புகைப்படம் எடுப்பவர்களையும் பெரிதும் ஈர்க்கிறது. நீர் வீழ்ச்சி பார்ப்பதற்கு மனதை பரவசப்படுத்தும். சில நீர்வீழ்ச்சிகள் அதன் உயரத்திற்கும் மற்றும் சில நீர்வீழ்ச்சிகள் சூரிய ஒளியில் வண்ணமயமாகத் திகழும் சிறப்பைப் பெற்றுள்ளன. இந்த குறிப்பிட்ட வானவில் நீர்வீழ்ச்சி அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவு அருகே உள்ள ஹிலோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதற்கு இப்பெயர் வந்ததற்கான காரணம், சூரிய ஒளி இந்த நீர்வீழ்ச்சியின் மீது படும்போது அது வானவில் வண்ணத் தோற்றத்தை தருகிறது. இது சுமார் 80 அடி உயரத்தில் உள்ளது. இதன் நீர் தொடர்ந்து பாய்வது இதன் தனிச் சிறப்பு ஆகும்.
சூரிய ஒளி நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீர்த்துளிகளில் படும்போது அது நிறங்களாகப் பிரிக்கப்படுகிறது. நீர்த் திவலைகள் நீர்வீழ்ச்சியின் சாரல் மற்றும் நீர்த்துளிகள் புகை போல் மேலே எழும்போது சூரிய ஒளி பட்டு வானவில் தோன்றுகிறது. இந்த அழகு எல்லோரையும் பரவசப்படுக்கிறது.
ஹவாயில் ஹிலோ எனுமிடத்தில் வைலுகு ஆறு இருக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது. இது இருக்கும் இடம் பெரிய பாறைகள் நிறைந்த பகுதியாகும். ஹவாயின் இயற்கை அழகு பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. காலை வேளையில் சூரியன் உதயமாகும்போது அதன் கதிர்கள் இந்த நீர்வீழ்ச்சி நீரில் பட்டு பல வானவில் வண்ணத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. ஹவாய் மொழியிலான இந்த வானவில் நீரை Waianuenue (வயன்யூன்) என்று குறிப்பிடுகிறார்கள். இது மிக வண்ணமயமான நீர்வீழ்ச்சி என்பதால் இதைக் காண மக்கள் அதிகம் கூடுகிறார்கள். காலை நேரத்தில் பத்து மணிக்கு இந்த வானவில் நீர்வீழ்ச்சி மிக அழகாகக் காணப்படும்.
இந்த நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் பச்சை பசேலென்று இருக்கிறது. இஞ்சி மான்ஸ்டெரா போன்ற செடிகள் இந்த இடத்தின் இயற்கை அழகை மேம்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. அழகிற்காக மட்டுமல்லாமல், இந்த நீர்வீழ்ச்சி புனிதமாகவும் கருதப்படுகிறது. இதன் நீர் விழும் குகை ஹவாய் மக்களின் இறைவியான ஹினாவின் இடமாகக் கருதப்படுகிறது.
காலை நேரத்தில் செல்லும்போது இதன் அழகை நன்கு ரசிக்க முடியும். இந்த இடம் சுலபமாகச் செல்லக்கூடிய இடமாக உள்ளது. மழை பெய்த பிறகு இந்த நீர்வீழ்ச்சி அகலமாகவும் இரைச்சல் சத்தம் அதிகமாகவும் காணப்படுகிறது..ஹவாயிலேயே மிகப்பெரிய நதியான வைலுகு நதி மூலமாக இந்த நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் பெறப்படுகிறது. ஆலமரங்கள் ஃபெர்ன் போன்ற மரங்கள் இந்த இடத்தை ஒரு மழைக்காடு பகுதியாக மாற்றி இயற்கை அழகால் எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
இதன் சுண்டி இழுக்கும் இயற்கை அழகு மட்டுமே காரணமாக இல்லாமல், இங்கே இயற்கையாகக் காணப்படும் குகை ஹவாய் மக்களின் பெண் தெய்வமான ஹினா என்பவரின் இருப்பிடமாகக் கருதப்படுவதால் கலாசார முக்கியத்துவத்தையும் இந்த வானவில் நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.
இதுபோன்ற வானவில் நீர்வீழ்ச்சியை நம் இந்தியாவில் மேகாலயாவில் காணலாம். இங்கு கண்ணாடி போன்ற தெளிவான நீரில் சூரிய வெளிச்சத்தில் வானவில்லாக திகழும் அதிசயம் நடைபெறுகிறது
ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி இரவில் நிலவொளியில் கூட வானவில்லை உருவாக்கும் சிறப்பு வாய்ந்தது. இது உலகின் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.