மனித வாழ்க்கை வரலாற்றில் குழந்தை பிறப்பு என்பது கிட்டத்தட்ட மறுபிறவிக்கு சமமாக ஒப்பிடப்படுகிறது. கர்ப்பகாலம் மற்றும் பிரசவம் என்பது பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருப்பதே இதற்கு காரணம். மனிதர்களைப் போலவே விலங்குகளிலும் பிரசவம் என்பது மிகவும் சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சில வகை விலங்குகள் நீண்ட கர்ப்ப காலத்தை கொண்டுள்ளன. அத்தகைய விலங்குகளைப் பற்றியும் அதற்கான காரணங்களை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள் :
நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட விலங்குகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள்தான். இவற்றின் கர்ப்ப காலம் கிட்டத்தட்ட 22 மாதங்கள் ஆகும்! யானைகளின் மூளை வளர்ச்சி மிகவும் சிக்கலானதாக இருப்பதோடு, பெரிய அளவிலான அவற்றின் குட்டிகளும் முழுமையாக வளர்வதற்கு நீண்ட காலங்கள் தேவைப்படுகிறன்றன. ஒரு யானை குட்டியானது, பிறக்கும்போதே 200 பவுண்டுகள் எடையுடன் பிறக்கிறது!
*ஒட்டகச்சிவிங்கி:
நிலப்பரப்பில் வாழும் விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கி கிட்டத்தட்ட 15 மாதங்கள் கர்ப்ப காலத்தை கொண்டது. ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்து மற்றும் கால்களை உருவாக்குவதற்காகவே இந்த நீண்ட கால கர்ப்பம் அவசியமாகிறது. ஒரு குட்டியானது பிறக்கும்போதே ஆறு அடி உயரத்தில் பிறக்கிறது! மேலும் இது பிறந்த சில மணி நேரங்களிலேயே ஓடவும் தொடங்கி விடுகிறது.
*காண்டாமிருகங்கள்:
காடுகளில் வாழும் சிலவகை கருப்பு காண்டாமிருகங்களின் கர்ப்ப காலம் கிட்டத்தட்ட 15 முதல் 16 மாதங்கள் கால அளவை கொண்டுள்ளது . இவை பிறந்தவுடன் தனியாக வாழ்வதோடு எழுந்து நடக்க வேண்டிய தேவையும் இருப்பதால், அதிகப்படியான கர்ப்ப காலத்தை எடுத்துக் கொள்கின்றன. மேலும், அவற்றின் பெரிய உடல் அமைப்பு மற்றும் காடுகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு இத்தகைய கால அளவு தேவைப்படுகிறது .
*ஒட்டகங்கள்:
பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்களின் கர்ப்ப காலம் கிட்டத்தட்ட 13 முதல் 15 மாதங்கள் கால அளவைக் கொண்டது. இத்தகைய நீடித்த கர்ப்பம் குட்டிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதோடு, பாலைவனத்தின் வறட்சியை தாங்கி பிடித்து வாழ்வதற்கு உதவுகிறது.
*திமிங்கல சுறாக்கள்:
திமிங்கல சுறாக்கள் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய மீன் இனத்தைச் சேர்ந்த இந்த வகை சுறாக்களின் கர்ப்ப காலம் கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் ஆகும். விலங்குகளிலேயே அதிக கர்ப்ப காலம் கொண்ட விலங்குகள் என்றால் அது திமிங்கல சுறாக்கள் தான். இவை அதிகமாக வெப்ப மண்டல பெருங்கடல் பகுதிகளில் தான் வாழ்கின்றன. ஒரு திமிங்கலச் சுறாவானது ஒரு பிரசவத்தில் கிட்டத்தட்ட 300 குட்டிகள் வரை பிரசவிக்கும்.
விலங்குகள் நீண்ட கர்ப்பகாலத்தை கொண்டிருப்பதற்கான காரணங்கள் :
* சில வகை விலங்குகள் பெரிய அளவிலான உடலமைப்பை கொண்டிருப்பதால் அவற்றின் குட்டிகள் முழுமையாக வளர்வதற்கு நிறைய காலம் தேவைப்படுகிறது.
* சிக்கலான மூளை அமைப்பு மற்றும் உடற்கூறுகளோடு சேர்த்து குளிர்ச்சியான மற்றும் கடுமையான சூழலை எதிர்த்து வாழ்வதற்கும் இத்தகைய நீண்ட கால கர்ப்பங்கள் அவசியமாகின்றன.
* மேலும் ஒவ்வொரு விலங்கும் அதற்குரிய இனம், அளவு, வாழும் சூழல் ஆகியவற்றை பொறுத்தும் கர்ப்ப காலம் மாறுபடுகிறது.
* குளிர்காலங்கள் மற்றும் கடுமையான வறட்சி காலங்களில் குட்டிகள் பிறக்கும்போது அங்கு நிலவும் கடுமையான சூழலை எதிர்த்து போராடுவதற்காகவும், போதிய உடல் வலிமையோடு தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக பிறந்தவுடன் நடக்க மற்றும் ஓட வேண்டிய தேவை இருப்பதாலும் இத்தகைய நீண்ட கால கர்ப்பங்கள் தேவைப்படுகின்றன.
* இத்தகைய விலங்குகளின் நீண்ட கால கர்ப்பத்திற்கு அவற்றின் மரபணுவும் ஒரு முக்கிய காரணம். தனித்துவமான அவற்றின் மரபணு அமைப்பு முறையோடு சேர்த்து அவற்றின் உடல் அமைப்பு மற்றும் இனப்பெருக்க முறைகளும் இத்தகைய நீண்ட கால கர்ப்பம் நிலவுவதற்கு காரணமாகின்றன.