
உலகத்தில் உள்ள கடல்கள் மற்றும் காடுகளில் பற்பல வகையான விலங்குகளும், பறவைகளும், முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பு இல்லாத பூச்சி இனம், புழுக்கள் என பலதரப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சில வகையானது, உருவ அளவில் நம்ப முடியாத அளவிற்கு மிகப் பெரியதாகவும், வேறு சில வகையான உயிரினங்கள் நடுத்தர மற்றும் கண்களுக்குப் புலப்படாத வகையில் மிகச் சிறியதாகவும் வாழ்ந்து வருகின்றன. இப்பதிவில் நாம் உலகிலேயே மிகப் பெரிய அளவிலான உருவம் கொண்ட 7 விலங்குகள் பற்றய விவரங்களைப் பார்க்கலாம்.
1. ஆப்பிரிக்க யானை (African Elephant): தரையில் வாழும் விலங்குகளில், உலகிலேயே மிகப்பெரிய உருவம் கொண்டது ஆப்பிரிக்க யானை. இதன் உயரம் சுமார் பத்து அடிக்கும் மேலாகக் கூட இருக்கும். எடை 5500 கிலோ அளவில் இருக்கும்.
2. கோடியாக் பேர் (Kodiak Bear): கோடியாக் கரடி எனப்படும் இந்த வகைக் கரடி 'ஊன் உண்ணி' இனத்தைச் சேர்ந்தது. அதாவது, மற்ற மிருகங்களின் மாமிசத்தை உணவாக உட்கொண்டு, தரையில் வாழும் மிருகம். இது தன் பின்னங்கால்களில் எழுந்து நிற்கும்போது அதிக உயரமானதாகக் காணப்படும். இதன் எடை சுமார் 700 கிலோ வரை இருக்கும்.
3. ஜெயன்ட் ஸ்குய்ட் (Giant Squid): முதுகெலும்பில்லாத மிகப்பெரிய கடல் வாழ் உயிரினம் இது. மர்மமான முறையில், மிக அரிதாகக் காணப்படுவது. சுமார் 40 அடி நீளம் வரை வளரக்கூடிய விலங்கு இது.
4. ஜப்பானிய எட்டுக்கால் பூச்சி நண்டு (Japanese Spider Crab): இந்த வகை நண்டுகளின் கால்கள் 12 அடி நீளம் வரை பரந்து விரிந்திருக்கும். இதுவும் ஒரு முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினம். இதன் உடல் பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டும், கால்கள் மூட்டுக்களால் இணைக்கப்பட்டும் இருக்கும். மேலும், ஒரு வெளிக்கூடு (Exoskeleton) அமைப்பும் பெற்றிருக்கும். மிகப்பெரிய கணுக்காலிகள் (Arthropods) கொண்ட உயிரினம் இந்த ஜப்பானிய எட்டுக்கால் பூச்சி நண்டு.
5. சால்ட் வாட்டர் குரோகோடைல் (Salt water Crocodile): ஊர்வனவற்றில் மிகப்பெரிய முதலை இனம் இது. சுமார் 20 அடி நீளம் வளரக் கூடியது. இந்த சால்ட் வாட்டர் குரோகோடைலின் எடை 900 கிலோவிற்கும் அதிகம் இருக்கும்.
6. திமிங்கலச் சுறா (Whale Shark): உலகிலேயே மிகப்பெரிய மீன் இனம் இந்த திமிங்கலச் சுறா. 40 அடி நீளம் வரை வளரக் கூடியது. கடல் அலைகள் மீது மிதந்து வரும் பாக்டீரியா, கடல் பாசி மற்றும் சிறிய விலங்கு போன்ற மிதவை நுண்ணுயிரிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்து வருகிறது.
7. ஓட்டகச் சிவிங்கி (Giraffe): நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே அதிக உயரமான மிருகம் ஓட்டகச் சிவிங்கி. முழுதும் வளர்ந்த ஆண் ஓட்டகச்சிவிங்கி 18 அடி உயரம் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இதன் கழுத்தும் கால்களும் மிக நீளமாக வளர்ந்து இந்த மிருகத்திற்கு பிரம்மிக்க வைக்கும் ஒரு தோற்றத்தை பெற்றுத் தந்திருப்பதாகவும் கூறலாம்.