மனித இனத்தின் நெருங்கிய உறவினமாகக் கருதப்படும் சிம்பன்சி காக்கப்பட வேண்டும்!

ஜூலை 14, உலக சிம்பன்சி நாள்
World Chimpanzee Day
Chimpanzee
Published on

வ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் நாளன்று, உலக சிம்பன்சி நாள் (World Chimpanzee Day) கொண்டாடப்படுகிறது. டாக்டர் ஜேன் குடால் என்பவர் 1960ம் ஆண்டு, ஜூலை 14 அன்று, தான்சானியாவின் கோம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் காட்டு சிம்பன்சிகளைப் பற்றி ஆய்வு செய்ய இணைந்தார். அவர் சிம்பன்சிகளின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடி வந்தார். மனித குலத்தின் நெருங்கிய உறவினராக இருக்கும் சிம்பன்சியைக் கொண்டாடும் வகையில் 2020ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முதல், ‘உலக சிம்பன்சி நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளானது சிம்பன்சிகள் மட்டுமின்றி, அழகான உயிரினங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உலக சிம்பன்சி நாள், முதன்முதலில் ஜேன் குடால் நிறுவனம், வட அமெரிக்க பிரைமேட் சரணாலயம் கூட்டணி, லைபீரியா சிம்பன்சி மீட்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் லிங்கன் பார்க் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்களின் குழுவால் நிறுவப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இரண்டிற்கும் அதிகமான கண்களையுடைய அபூர்வமான 6 விலங்குகள் பற்றி அறிவோமா?
World Chimpanzee Day

மனிதர்களுக்கு மிக நெருங்கிய இனம் என்று கருதப்படும் சிம்பன்சிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், அவற்றை வேட்டையாடுவதைத் தடுக்கவும் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக சிம்பன்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித குலத்தைப் போலவே, சிம்பன்சிகளும் அன்பிலும் அக்கறையிலும் வாழ்கின்றன, மேலும் அவை மிகவும் அழகான உயிரினங்களில் ஒன்றாகும்.

சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. இவை, மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீட்டர் (3 முதல் 4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப்பகுதிகளிலும் வாழ்கின்றன.

இதனைப் பொதுவாக, சாதாரண சிம்பன்சி என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்பன்சிக்கு நெருங்கிய இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்பன்சி என்கின்றனர். இவ்விரு இனங்களும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
மனித வாழ்க்கையின் அடித்தளமாகத் திகழும் பாறைகளின் முக்கியத்துவமும் பயன்களும்!
World Chimpanzee Day

சிம்பன்சிகள் மாமிசங்களை சிறிய கற்கருவிகளால் வெட்டி உண்ணத் தொடங்கியதால், அதன் பற்கள் கடித்து மெல்ல குறைவான அழுத்தமே தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அதன் பின் சந்ததியினர், வாய் பரிணாமம் அடைந்து பேசுவதற்கு ஏற்ற உடலமைப்பாக மாறியது என ஸ்காட்வேர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம ஆய்வாளர் டேனியல் லைபர்மேன் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிம்பன்சிகளைப் பற்றி சில சுவையான உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்:

1. சிம்பன்சிகளுக்குத் தேவையான நீர், பழங்கள் போன்றவை ஆப்பிரிக்காவின் அடர்த்தியான மழைக்காடு பகுதிகளில் காணப்படுவதால், அவை பெரும்பான்மையாக மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. சுமார் 21 ஆப்பிரிக்க நாடுகளில் சிம்பன்சிகள் இருக்கின்றன.

2. கொரில்லாக்களை விட சிம்பன்சிகள் மற்றும் போனோபோக்களுடன் மனிதர்கள் மிக நெருக்கமான தொடர்புடையவர்களாக இருக்கின்றன. இவ்விரு இனங்களின் டி.என்.ஏ. மனிதர்களின் டி.என்.ஏ.வுடன் 95 முதல் 99சதவிகிதம் எனும் அளவில் ஒத்துப்போகின்றன.

3. சிம்பன்சிகள் சைகை மொழி போன்ற மனித மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளன. சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், சிம்பன்சிகள் பராமரிப்பாளர்களுடன் தொடர்புகொள்ள அமெரிக்க சைகை மொழியை (ASL) கற்றுக்கொள்ள முடிந்தது. வாஷோ என்ற சிம்பன்சி, அமெரிக்க சைகை மொழி வழியாக தொடர்பு கொள்ளக் கற்றுக்கொண்ட முதல் மனிதரல்லாதவர் என்று அறியப்பட்டது. மேலும் அதனால், 350க்கும் மேற்பட்ட சைகைகளைச் செய்ய முடிந்தது.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே அதிக விலை மதிப்பு மிக்க 5 வளர்ப்புப் பறவைகள்!
World Chimpanzee Day

4. மனிதர்களைப் போலவே, சிம்பன்சிகளும் தங்களது உணவுக்கும், பாதுகாப்புக்கும் தாங்களாகவே தயாரித்த கருவிகளைப் பயன்படுத்துகின்றன. புற்றுகளில் இருந்து கரையான்களைத் தோண்டி எடுக்கச் சிறிய கிளைகளைப் பயன்படுத்துவது முதல், கொட்டைகளை உடைக்க, பாறைகளை உடைக்கத் தேவையான கற்கருவிகளைத் தயாரித்துக்கொள்ளும் படைப்பாற்றலைக் கொண்டுள்ளன.

5. சிம்பன்சிகள் மற்ற உணவு வகைகளை விட, அதிகமாக பழங்களை உண்கின்றன. விதைகள், இலைகள், பூச்சிகள், தேன் மற்றும் வேர்கள் போன்றவற்றை உண்ணும் இவை, சில வேளைகளில் குரங்குகள் அல்லது சிறிய மான் போன்ற பிற வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடியும் உண்டிருக்கின்றன. சிம்பன்சி தனிப்பட்ட முறையில் உணவு தேடிக் கொண்டாலும், சில வேளைகளில் ஒரு குழுவாக இணைந்தும் உணவு தேடிக் கொள்கின்றன.

6. சிம்பன்சிகள் 20 முதல் 120 வரையிலான எண்ணிக்கையில் குழுக்களாக இருக்கின்றன. இக்குழுக்களில் அவ்வப்போது பிளவு, இணைவு என்றும் இருக்கின்றன. ஒரு ஆதிக்க ஆல்பா ஆண் சிம்பன்சி தலைமையில் இவை இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வளர்க்க உகந்த செடிகளும்; வளர்க்கக் கூடாத செடிகளும்!
World Chimpanzee Day

7. பெண் சிம்பன்சிகள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறக்கின்றன. பெரும்பாலான கர்ப்பங்களில் பொதுவாக ஒரு குழந்தை மட்டுமே பிறக்கும். குழந்தை சிம்பன்சிகள் மூன்று முதல் ஐந்து வயது வரை தாயின் உரோமங்களைப் பற்றிக் கொண்டு அதன் முதுகில் சவாரி செய்யும், இதன் விளைவாக முதிர்ச்சியடைந்த பிறகும் நெருங்கிய குடும்பப் பிணைப்புடன் இருக்கின்றன.

8. சிம்பன்சிகள் 80 வயது வரை வாழலாம். சிறைப்பிடிக்கப்பட்ட மிகப் பழமையான பெண் சிம்பன்சி லிட்டில் மம்மா என்பதாகும். 2017ம் ஆண்டில் இது இறந்தபோது, அதன் வயது 76 முதல் 82 வயது வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட சிம்பன்சிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 38 ஆண்டுகள் என்றாலும், காடுகளில் சிம்பன்சிகளின் ஆயுட்காலம் பதிவு செய்வது சற்று கடினமானதாகவே இருக்கிறது.

9. சிம்பன்சிகள் மரத்திலிருந்து மரத்திற்கு ஏறி ஊசலாடுவதன் மூலம் சுற்றி வருகின்றன. கொரில்லாக்களைப் போலல்லாமல், சிம்பன்சிகள் பொதுவாக நான்கு கால்களிலும் நடக்கின்றன, இல்லையெனில் முழங்கால் நடைப்பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிதான சந்தர்ப்பத்தில் இரண்டு கால்களில் நடப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம், சிம்பன்சியை அழிந்து வரும் உயிரினமாக அறிவித்துள்ளது. மரம் வெட்டுதல், சுரங்கம் வெட்டுதல், எண்ணெய் எடுப்பது மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் போன்ற அதிகரித்து வரும் மனிதத் தேவைகளுக்கான நடவடிக்கைகள் காரணமாக, சிம்பன்சிகளின் இயற்கையான வாழ்விடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

மனித இனத்தின் நெருங்கிய இனமாகவும், உறவாகவும் கருதப்படும் சிம்பன்சி இனம் காக்கப்பட வேண்டுமென்று கொண்டாடப்படும் இந்நாள் உண்மையில் வரவேற்கத்தக்கதே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com