
பசுமையான காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளில் இருந்து விழுகின்ற பல நீர்வீழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், கடலுக்கு அடியில் உண்டாகும் நீர்வீழ்ச்சிப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு இடையே ஆழ்கடலில் அமைந்துள்ளது.
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட, இந்த ஆழ்கடலில் உள்ள நீர்வீழ்ச்சி சுமார் 4 மடங்கு உயரமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது கடல் பரப்பிலிருந்து கடலுக்கு அடியில் சுமார் 3.5 கி.மீ ஆழத்தில் பாய்கிறது. மேலும், இந்த நீர்வீழ்ச்சியின் அளவும், வேகமும் விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளதாம். வினாடிக்கு 175 மில்லியன் கன அடி என்ற விகிதத்தில் நீர் பாய்கிறது.
கிரீன்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள டென்மார்க்கின் நீரிணைப் பகுதிக்கிடையில் கடலுக்கடியில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. (நீரிணை என்பது இரண்டு பெரிய நீர்ப் பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதி ஆகும்.)
சிறப்பு கடலறிவு கருவிகள், செயற்கைக்கோள் தரவுகள், ஆழ்கடல் ஆய்வு உபகரணங்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீருக்கடியில் உள்ள இந்த உயரமான நீர்வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளனர்.
வெவ்வேறு வெப்பநிலை, உப்புத்தன்மை, மற்றும் அடர்த்தி கொண்ட கடல் நீரோட்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது, அந்த நீரோட்டங்கள் கீழ் நோக்கி ஒரு பெரிய நீரோட்டமாக பாய்கின்றன. இந்த இயற்கை விளைவே நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. அதாவது கீரின்லாந்து கடல்களிலிருந்து வரும் குளிர்ந்த, அடர்த்தியான நீர், அட்லாண்டிக்கிலிருந்து வரும் வெப்பமான, இலகுவான நீரினோடு கலக்கும்போது, அது சக்திவாய்ந்த கீழ்நோக்கிய ஓட்டத்தை உருவாக்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நீரோட்டத்தில் உள்ள நீரின் அளவு, அட்லாண்டிக்கில் பாயும் அனைத்து நதி நீரின் கூட்டுத்தொகையை விட 20 முதல் 40 மடங்கு அதிகமாகும்.
கடலின் ஆழத்தில் வெவ்வேறு நீரோட்டங்களின் ஒன்றிணைப்பால் உருவாவதால் இந்த நீர்வீழ்ச்சியை மனிதர்கள் நேரடியாகப் பார்ப்பது கடினமானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சியைக் காண ஒரே வழி.
இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்டுபிடிப்பானது, கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் பல மர்மங்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஞ்ஞானிகள் கடலுக்கடியில் பல ஆராச்சிகளை மேற்கொள்ள இது ஊக்விக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.