"கூட்டுக் குடும்பம்னா இதுதான்!" - மத்தவங்க குழந்தைக்கு சோறு ஊட்டுற தவிட்டுக் குருவியோட தாராள மனசு!

Yellow-billed Babbler
Yellow-billed Babbler
Published on

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும், இயற்கையின் ஏதாவது ஒரு தேவைகளுக்காக  படைக்கப்பட்டுள்ளது. ஒரு செல் உயிரியில் தொடங்கி 100 டன்னுக்கும் அதிக எடையுள்ள நீலத்திமிங்கலம் வரையுள்ள ஒவ்வொரு உயிரினங்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், வாழ்வியல் தற்காப்பு உத்திகளை கையாள்வதிலும் இயற்கையாகவே படிப்படியாக சிறந்து விளங்குகின்றன.

அப்படி இருக்கும் இந்த உயிரியல் சுழற்சியில், நாம் பார்க்க இருக்கும் ஒரு விசித்திரமான சமூகப் பின்புலத்தை கொண்ட ஒரு பறவையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், அந்தப் பறவையின் பெயர் தவிட்டுக் குருவி..!

தவிட்டுக் குருவிகளின் வெவ்வேறு பெயர்கள்:

ஒவ்வொரு பகுதிகளுக்கும் இந்த குருவிகளின் பெயரானது வெவ்வேறு விதமாக கூறப்படுகிறது. குறிப்பாக கறையான் குருவி, புழுதிக் குருவி, வேலிக்குருவி,வெள்ளைத் தலைச் சிலம்பன்,குந்துகாலி,புழுதிச்சிலம்பன், தவிட்டுச் சிலம்பன் இப்படி ஒவ்வொரு ஊர் ஒரு பக்கமும் ஒவ்வொரு பெயர் சொல்லி மக்கள் இந்த குருவியை அழைக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதனை Yellow-billed Babbler என்ற பெயர் இருக்கிறது. இதன் அறிவியல் பெயர் “டர்டோயிட்ஸ் அஃபினிஸ்”(Turdoides affinis) ஆகும்.

வாழ்வியல் மற்றும் சமூகப் பின்புலம்:

இந்த குருவிகள் தனியாக வாழாமல் ஒரு குழுவாக சேர்ந்து வாழும். ஒரு குழுவில் ஆறு முதல் 10 குருவிகள் இருக்கும். பார்ப்பதற்கு பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும், இதன் அலகானது மஞ்சள் நிறத்தில் காணப்படும். பெரும்பாலும் தென்னிந்திய பகுதிகளிலேயே அதிகமாக இக்குருவிகள் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தான் அதிகமாக பரவி இருக்கிறது. மற்ற பறவைகளைப் போல் நடந்து செல்லாமல் இந்த தவிட்டுக் குருவிகள் குதித்து குதித்து நகன்று செல்லும்.

மரக்கிளைகள், பொந்துகள், வீட்டின் மேற்கூரைகள் போன்ற இடங்களில், தனது வசதிக்கேற்ப கூடுகளை அமைத்துக் கொள்கிறது. பெண் குருவி முட்டையிட்டு அடைகாக்கும் பணியில் ஈடுபடும். அதோடு சேர்ந்து குழுவில் இருக்கும் மற்ற பறவைகளும் முட்டையை அடைகாக்கும் பணியில் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் புதிதாகப் பிறந்த குஞ்சுகளுக்கும் உணவுகளை தேடி சேகரித்து வந்து ஊட்டுவதிலும் எல்லா குருவிகளுக்கும் பங்கு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வேளாங்கண்ணி பயணம்: தாய் வீட்டிற்குச் சென்று வந்த உணர்வு!
Yellow-billed Babbler

நீங்கள் நினைக்கலாம், தாய் பறவை தானே தனது குஞ்சுகளுக்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? மற்ற பறவைகள் எப்படி பாதுகாக்கும்? அதாவது ஒரு குழுவில் இருக்கும் தாய் தந்தை பறவைகளுக்கு முதன் முதலாக பிறந்த குஞ்சுகள் தற்போது வளர்ந்து பெரியதாக ஆகும் வரை அந்த குழுவில் தான் இருக்கும். அது மட்டும் இல்லாமல், ஒரு சில சகோதர குருவிகளும் அதே குழுவில் தான் இருக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு குருவிகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும்.

இனப்பெருக்க முதிர்ச்சியை அடைந்ததும் குழுவில் இருக்கும் ஒவ்வொரு குருவிகளும் தனியாக சென்று தனக்கென ஒரு ஜோடியை கண்டுபிடித்து, புதியதாக ஒரு குழுவை அமைத்துக் கொள்ளும்.

இதன் முட்டைகள் பச்சை நீலம் கலந்த நிறத்தில் இருக்கும். அடைகாக்கும் நாள் 16ல் இருந்து 18 நாள்கள் ஆகும். குஞ்சுகள் நன்கு வளர்ந்து கிட்டத்தட்ட ஒன்றை வருடங்கள் வரை தாய்க்குருவிகளிடமே இருக்கும். இதன் எடையானது 100 கிராமிற்குள் தான் இருக்கும். இந்த குருவிகள் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிட்டு அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.

இதையும் படியுங்கள்:
ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!
Yellow-billed Babbler

கூட்டமாகத்தான் இரை தேட செல்லும். இக்குருவிகளை தனியாக பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்தால் குருவிகள் ஒவ்வொன்றும் எச்சரிக்கை ஒலியை எழுப்ப ஆரம்பிக்கும். அதன் பிறகு அனைத்துக் குருவிகளும் சுதாரித்துக் கொள்ளும்.

கிட்டத்தட்ட ஐந்து முதல் எட்டு வருடங்கள் வரை இக்குருவிகளின் வாழ்நாள் இருக்கிறது. 

இந்த குருவிகள் கடைசியாக குழுவை விட்டு பிரிந்தாலும் கூட, பிரிவதற்கு முன்பு குழுவில் உள்ள ஒவ்வொரு குருவிகளுக்கும் தங்களால் முடிந்த பல உதவிகளை செய்துவிட்டு தான் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற ஒற்றுமையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக, இவ்வுலகில் வாழும் குருவிகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பவைகள் தான் இந்த தவிட்டுக் குருவிகள்..! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com