
‘இருப்பதை காப்பது உற்பத்திக்கு சமம்’ என்பது சான்றோர் வாக்கு. இயற்கை அளித்த ஒப்பில்லாத சீதனங்கள் நன்மை பயக்கும் ஒட்டுண்ணிகளும் இரை விழுங்கிகளும் ஆகும். தீமை பயக்கும் பூச்சிகள் தோன்ற ஆரம்பித்த காலத்திலேயே பல ஆயிரக்கணக்கில் பிற பூச்சிகளை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளும் பரிணாம வளர்ச்சியில் தோன்ற ஆரம்பித்தன. இவற்றைத்தான் நாம் ‘பகையின பூச்சிகள்’ என்று கூறுகின்றோம். அவற்றை எப்படிப் பேணிக் காத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்கலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது’ என்பதற்கிணங்க இரை விழுங்கி பூச்சிகளும் பசித்தாலும் ஒருபோதும் தாவர இனங்களைத் தின்னாது. பிற பூச்சிகளையே பிடித்து உண்ணும் குணம் உடையது. இரை விழுங்கி பூச்சிகள் பயிர் பூச்சிகள் வாழும் பயிர்களிலும், செடி, கொடி, மரங்களிலும் பூச்சிகள் வாழும் நீரிலும், பூச்சிகள் பறக்கும் வானிலும் காணப்படுகின்றன. தட்டான், தும்பி இனங்களின் குஞ்சுகள் நீர் வண்டு போன்ற இரை விழுங்கிகள் நீரில் வாழும் நீரில் உள்ள கொசுக்களின் இளம் பருவங்கள், இதர சிறிய நீர் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். வண்டினங்கள் நிலத்தில் வாழும் பொருட்கள், கூட்டுப் புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றை இரையாக உண்டு வாழும்.
ஒட்டுண்ணிகள் என்றால் ஆங்கிலத்தில் பாரசைட் அல்லது பாரசிட்டாய்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை பூச்சிகளின் பருவ நிலைகளைத் தேடி அவற்றின் மேல் தனது முட்டையினை இட்டு பின்னர் ஒட்டி உண்டு அழிப்பதால் ஒட்டுண்ணிகள் என பெயர் பெற்றன. குளவி மற்றும் ஈக்கள் எனும் ஒட்டுண்ணிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒட்டுண்ணிகளின் முட்டை, புழுப்பருவம், கூட்டுப் புழு பருவம், முழு வளர்ச்சி அடைந்த பருவம் என்ற நான்கு நிலைகள் உண்டு. அதில் புழுப் பருவம்தான் ஒட்டுண்ணியாக செயல்பட்டு தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்களை அழிக்கின்றது. முழு வளர்ச்சி அடைந்த ஒட்டுண்ணிகள் பூக்களின் மகரந்தத்தையும் தேனையும் உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.
இரை விழுங்கிகள் இரையினை துரத்துவதற்கு வலுவான கால்களையும் பறக்கும் தன்மையினையும் பெற்றுள்ளன. இரையினை மறைந்து இருந்து தாக்கிப் பிடிப்பதற்கு ஏற்றவாறு நிலத்தினை தான் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் அல்லது இறந்தது போல் நடித்து பின்னர் அவை அருகில் வரும்போது தாக்கி அழிக்கும். இன்னும் சில இரை விழுங்கிகள் தனது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இலைகள் போன்றும், கொடிகள் போன்றும், குச்சி போன்றும், பூக்கள் போலவும், மரப் பட்டைகள் போன்றும் பூமியின் மீதுள்ள மண் மற்றும் சிறிய கற்கள் போன்றும் உருவ அமைப்பு மற்றும் நிற அமைப்புப் பெற்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதபடி இருந்து அவற்றை தாக்கி அழிக்கும். இக்குணத்தினை போலி நிறம் என்று அழைப்பதுண்டு. ஒட்டுண்ணிகள் வளர்ச்சி அடையப் பயன்படும் பயிர் பூச்சிகளின் பருவங்கள் ‘ஓம்புயிரி’ என்று அழைக்கப்படுகிறது.
ஒட்டுண்ணிகளையும் இரை விழுங்கிகளையும் எப்படிப் பேணி பாதுகாப்பது? அவற்றின் எண்ணிக்கையை பெருக்குவது என்றால் பூச்சிக்கொல்லி மருந்துகளை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் குறியீட்டுப் பூச்சிகளை மட்டும் அழிக்கும் பூச்சிக்கொல்லிகளை தேர்வு செய்து சிபாரிசு செய்யப்பட்ட அளவுகளில் பயன்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை ஒன்றாகக் கலந்து தெளித்தல், பயிர் பூச்சிகள் பொருளாதார சேத நிலையை எட்டாத நேரங்களில் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல் போன்ற தவறான வழிகளை அறவே கைவிட வேண்டும்.
பயிர்களில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல் மற்றும் பயிரின் நுழைப்பாகத்தில் குறிப்பிட்ட பூச்சிகொல்லிகளை தெளிக்காமல் விடுவது, பழத்தோட்டங்களில் சில மரங்களில் மட்டும் அறவே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்காமல் இருத்தல் போன்ற முறைகளைக் கையாண்டால் 50 சதவிகிதம் நன்மை தரும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கி பூச்சிகளை பேணிப் பாதுகாக்க முடியும் என ஆராய்ச்சி வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மண்ணைப் பதப்படுத்தும்பொழுது பண்ணைக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருந்தால் ஒருசில எதிரி பூச்சிகளின் கூட்டுப்புழு பருவம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. இம்முறையை பயன்படுத்துவதை உளவியல் முறை மூலம் பேணிப் பாதுகாத்தல் என்று கூறுவர்.
மகரந்தம் மற்றும் தேன் அதிக அளவில் அளிக்கும் சூரியகாந்தி, ஆமணக்கு, கடுகு, கொத்தமல்லி, சோயா, மொச்சை மற்றும் பூச்செடிகள் போன்ற பயிர்களை வயல்களின் ஓரங்களில் நடவு செய்தால் ஒட்டுண்ணிகள் மற்றும் இடைவெளிகள் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஊடுபயிர் விவசாயம் என்று சொல்லக்கூடிய நிலக்கடலை பயிரில் பயிர் வகை மற்றும் கம்புப் பயறும், பருத்தியில் மக்காச்சோளமும், கரும்பில் சோயா, மொச்சையும், சோளப்பயிரில் பயறு வகைகளை ஊடுபயிராக பயிரிடும் பொழுது ஒட்டுண்ணிகள் மற்றும் இடைவெளிகளின் எண்ணிக்கை பெருகுகின்றன.
அதேபோல், ஒரே பயிர் தொடர் சாகுபடி முறையை தவிர்த்து பல பயிர் சாகுபடி முறையை கையாளுதல், இயற்கை உரங்களை அதிக அளவு பயன்படுத்துதல், அறுவடைக்குப் பின் பண்ணைக் கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் எஞ்சிய பயிர் பகுதிகளை சேமித்தல் போன்றவற்றின் மூலம் ஒட்டுண்ணிகளும் இரை விழுங்கிகளும் பெருகி பரவ வாய்ப்பாக அமையும்.