சீனாவின், லியாவோனிங் மாகாணத்தின் பன்ஜினுக்கு தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள டோவா கவுண்டியில் அமைந்துள்ள கடற்கரை சிவப்புக் கடற்கரை (Red Beach) என்றழைக்கப்படுகிறது.
பன்ஜின் பகுதியில் லியாவோஹி என்னும் ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் உள்ள கழிமுகத்தில் இப்பகுதி உள்ளது. இது தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாகும். சதுப்பு நிலங்களில் காணப்படும் இப்பகுதி ஆழமற்ற கடல், அலையுள்ள நிலம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இக்கடற்கரைப் பகுதியில் இருக்கும் செனோபோடீசியா குடும்ப சிவப்புத் தாவரங்களில் ஒன்றான சீப்வீட் (அறிவியலில், Suaeda Salsa) என்ற ஒரு வகைக் கோரைப்புல் (பாசி என்றும் கூறுகின்றனர்) சிவப்பு நிறத்திலிருப்பதால், இக்கடற்கரைப் பகுதி முழுவது அழகிய சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மற்ற கடற்கரைகள் போலவேக் காட்சியளிக்கும் இக்கடற்கரை, ஏப்ரல் மாதக் கடைசியில் வசந்தக் காலத்தில் பச்சை வண்ணத்தில் கோரைப்புற்கள் முளைக்கின்றன. மூன்று மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் இவை அடர் சிவப்பு வண்ணமாக மாறி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உலகின் அழகிய சிவப்புக் கடற்கரையாகக் காட்சியளிக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இவை இளஞ்சிவப்பு நிறத்தை அடைந்து, குளிர் காலத்தில் காய்ந்து விடுகின்றன. மூன்று மாதங்களில் மீண்டும் கோரைப்புற்கள் புதிதாக உருவாகி விடுகின்றன.
இயற்கையிலேயே கோரைப்புற்கள் சிவப்பாக மாறி விடுவதாகவும், கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத்தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்றும் ஆய்வாளர்களிடையே இருவேறு கருத்துகள் இருந்து வருகின்றன. இந்த சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் பரப்பளவில் பரவியுள்ளது.
இப்பகுதி பூமியில் உள்ள அரிதான கொக்கு இனமான ரெட் - கிரீன் கொக்குகளின் தாயகமாகவும் உள்ளது. வெள்ளை நாரைகள் மற்றும் கறுப்பு கொக்குகள் போன்ற பிற உயிரினங்களுக்கும் சரணாலயமாக மாறியுள்ளது. கிழக்கு ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயரும் பறவைகளுக்கு இது ஒரு பிரபலமான இடை நிறுத்தமாகவும் இருக்கிறது. சதுப்பு நிலத்தில் மீன் மற்றும் மிட்டன் நண்டுகள் ஏராளமாக உள்ளன. இக்கடற்கரைப் பகுதியில் 260 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 399 பிற விலங்கு இனங்களும் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இக்கடற்கரையைக் காணச் சீனாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 1988 ஆம் ஆண்டு முதல், சீன அரசு, இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை மிகக் கவனமாகப் பாதுகாத்து வருகிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமேச் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கின்றனர்.
அங்கிருக்கும் இயற்கைச் சூழலுக்குத் தீங்கிழைக்காமல் பார்ப்பதற்காக 6,500 அடி நீளத்துக்கு மரப்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மீது நடந்து சென்று, சிவப்புக் கடற்கரையை ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். சில இடங்களில் சிவப்புப் பாசிகளுக்கு இடையேத் தண்ணீர் ஓடுகிறது. அங்கேப் படகுச் சவாரியும் நடைபெறுகிறது. அதிகாலையில் சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரியன் மறையும் போதும், இந்தச் சிவப்புக் கடற்கரை பார்க்க மிகமிக அழகாக இருக்கும்.