African penguin
African penguin

கழுதை போல் சத்தமிடும் பென்குயின்கள் பற்றி தெரியுமா?

அக்டோபர் 12, சர்வதேச ஆப்பிரிக்க பென்குயின் விழிப்புணர்வு தினம்
Published on

ழகான தோற்றம் கொண்ட பறக்க முடியாத பறவைகளான பென்குயின்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. பலரும் பென்குயின்கள் அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் வசிக்கும் உயிரினங்கள் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவை ஆப்பிரிக்காவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மிதமான வெப்பநிலையிலும் வாழ்கின்றன. இந்த அரிய உயிரினங்களின் பாதுகாப்பு பற்றிய கவனத்தை மக்களிடம் ஈர்ப்பதற்காக, அக்டோபர் 12 அன்று சர்வதேச ஆப்பிரிக்க பென்குயின் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்க பென்குயின்களின் சிறப்பு இயல்புகள்:

ஜாக்காஸ் பென்குயின்கள்: ஆப்பிரிக்கா பென்குயின்கள் பெரும்பாலும் கழுதை போல கூச்சலிடும் தனித்துவமான இயல்பைக் கொண்டுள்ளன. எனவே, இவை ஜாக்காஸ் பென்குயின்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தனித்துவ வடிவங்கள்: ஒவ்வொரு ஆப்பிரிக்க பென்குயினின் மார்பிலும் மனிதக் கை ரேகைகளைப் போலவே தனித்துவமான கருப்புப் புள்ளிகள் மற்றும் வடிவங்கள் உள்ளன. இந்த அடையாளங்கள் தனிப்பட்ட பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவுகின்றன.

அளவு: இவை நடுத்தர அளவில் இருக்கும். சுமார் இரண்டு அடி உயரம் மற்றும் ஐந்து முதல் 8 பவுண்டுகள் வரை எடை கொண்டவை. எம்பரர் பென்குயின் சற்று எடை அதிகமாக இருக்கும்.

கூடு கட்டும் பழக்கம்: வேட்டையாடுபவர்கள் மற்றும் கடுமையான வானிலை நிலைகளில் இருந்து தங்கள் முட்டைகளை பாதுகாக்க அவை பெரும்பாலும் புதர்களுக்கு அடியில் கூடு கட்டுகின்றன. பெண், ஆண் இரண்டு இனங்களுமே முட்டைகளைப் பாதுகாக்கின்றன.

உணவு முறை: ஆப்பிரிக்க பென்குயின்கள் முதன்மையாக. மீன்களை உண்ணுகின்றன. குறிப்பாக, மத்தி மற்றும் நெத்திலிகள் இவற்றின் விருப்பமாக இருக்கின்றன. இவை வருடத்திற்கு ஒருமுறை பழைய இறகுகளை உதிர்த்து விடும். புதியவை வளரும் வரை அவர்களால் நீந்த முடியாது. எனவே, அவை உண்ணாவிரதம் அல்லது பட்டினி இருக்க நேரிடுகிறது. அந்த சமயத்தில் தங்கள் உடலில் சேமிக்கப்பட்ட உடல் கொழுப்பை நம்பியே இவை இருக்கின்றன.

நீச்சல் திறன்கள்: இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை. நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் கூட்டமாக வாழும். இவை திறமையான நீச்சல் வீரர்கள். தண்ணீரில் மணிக்கு 15 மைல் தூரம் நீந்தி செல்லும் இயல்புடையவை.

இதையும் படியுங்கள்:
மன நலனைக் காக்கும் 6 மந்திரங்கள்!
African penguin

ஆபத்துகள்: காலநிலை மாற்றத்தின் காரணமாக இவை ஆபத்தை எதிர்கொள்கின்றன. வாழ்விட அழிவு, எண்ணெய்க் கசிவுகள், அதிகப்படியான மீன் பிடித்தல் மற்றும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் மீன்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற அச்சுறுத்தல்களால் ஆப்பிரிக்கப் பென்குயின்கள் சிக்கலையும் ஆபத்தையும் அனுபவிக்கின்றன.

சிறப்பு இறகுகள்: இவை சிறப்பு இறகுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் நீர் புகாது. மேலும் வானிலை குளிர்ச்சியாக மாறினால், அவை கதகதப்பாக மாறி காப்புப் பொருளாகவும் செயல்படுகின்றன. இவற்றின் கண்களுக்கு மேலே உள்ள சுரப்பி அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். குறிப்பாக, ஆப்பிரிக்கப் பென்குயின்களின் கண்களுக்கு மேல் ஒரு சிறப்பு இளஞ்சிவப்பு சுரப்பி உள்ளது. இது வானிலை வெப்பமடையும்போது உடலை குளிர்விக்க அதிக இரத்தத்தை சுரப்பிக்கு அனுப்புகிறது.

சாமர்த்தியம்: இவை தண்ணீரில் நீந்தும்போது அவற்றின் பின்புறத்தில் உள்ள கருப்பு கோட் போன்ற அமைப்பு வெளியில் இருந்து பார்க்கும் வேட்டையாடுபவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அவை சாமர்த்தியமாக அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com