அவசர வாழ்க்கை, அன்றாட வேலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சமாளிப்பது, தனக்கான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது, கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு, பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மனநலன் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஸ்டிரஸை கவனிக்கப்படாமல் விட்டால் உடல் எடை அதிகரித்து பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. அத்தகைய மன நலனைக் காக்கும் முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. காரணமறிதல்: முதலில் எதற்காக பதற்ற உணர்வு ஏற்படுகிறது? எந்த விஷயங்கள் எல்லாம் உணர்வு ரீதியாக உங்களை தொந்தரவு செய்கிறது என்பதை கவனித்து, அதற்கான காரணத்தை அறிந்தாலே மனநல பிரச்னை பாதி குறைந்த மாதிரிதான்.
2. திட்டமிடல்: எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும் திட்டமிடுவது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருப்பதால் திட்டமிடுவதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
3. ஒரு நேரத்தில் ஒரு வேலை: ஒரே நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, ஒரு வேலையை படிப்படியாக ஒரு நேரத்தில் செய்வதால் மனம் பதற்றம் குறைவதோடு. வேலையும் திறம்பட இருக்கும்.
4. யோகா: தினமும் யோகா அல்லதுபிராணாயாமம் போன்ற பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதி அடைவதோடு ஸ்ட்ரெஸ் குறையும். காலை எழுந்ததும் மொபைல் போனில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி எந்த யோசனையும் இல்லாமல் டீ அருந்துவது போன்ற மனது மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட்டாலே மன ஆரோக்கியம் மேம்படும்.
5. உடற்பயிற்சி: தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, ஜிம் செல்வது இதில் அவரவருக்கு ஏற்றதை, இயன்றதை பின்பற்றினாலே மனது அமைதி அடைவதோடு மனநலன் பாதுகாக்கப்படுகிறது.
6. தூக்கம்: தூக்கம் என்பது பரபரப்பான வேலைகளில் இருந்து ஓய்வு கொடுப்பதாகும். ஆதலால், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்பது நிபுணர்கள் கூற்றாக உள்ளது.
இவை தவிர கலை, எழுத்து, இசை, ஓவியம் வரைவது இதில் உங்களுடைய பொழுதுபோக்கு எதுவோ அதை கடைபிடிப்பதோடு உங்களைப் புரிந்து கொள்பவர்களிடம் மனம் விட்டு பேசுவதும் மன நலனை காக்கும் நல்வழிகள் ஆகும்.