
விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களைத்தான் பலரும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். ஆனால், அதன் கழிவுகளும் நமக்கு பல்வேறு வகையில் உதவுகிறது. அந்த வகையில், நெல் உமி எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
அனைத்துத் துறைகளிலும் கழிவுகள் என்பது இன்றியமையாத ஒன்று. இருப்பினும் அந்தக் கழிவுகளை நாம் திறம்பட நிர்வகித்தால், அதன் பயன்களை நம்மால் முழுமையாகப் பெற முடியும். இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மறுசுழற்சி முறை, இன்றைய நிலையில் முன்னேற்றப் பாதையில் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. வீண் என தூக்கி எறியும் குப்பைகளில் இருந்து விவசாய உரங்கள் தயாரிக்கப்படுவது, குப்பை மேலாண்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது.
அந்த வகையில், நெல்லை அரிசியாக மாற்றும்போது கிடைக்கும் உமியை பலரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை. சில இடங்களில் நெல்லை அரிசியாக மாற்ற அரிசி மில்களில் கட்டணம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக உமியை எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில், மேலை நாடுகளில் உமிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் வெளிச்சந்தையில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
விவசாயிகள் பலரும் நெல் உமியை சரியாகக் கையாள்வதில்லை. ஆனால், வேளாண் கழிவு என விவசாயிகள் ஒதுக்கும் உமிதான் கட்டுமானத் தொழில், சிமெண்ட் தயாரிப்பு மற்றும் பிளைவுட் தயாரிப்புகளில் மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. அதேநேரம் மேலைநாடுகளில் மவுசு கூடும் அளவிற்கு நெல் உமியில் என்ன இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 38 சதவிகிதம் செல்லுலோஸும், 32 சதவிகிதம் லிக்னினும் நெல் உமியில் நிறைந்துள்ளது. இதனை மறுசுழற்சி செய்து எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். மறுசுழற்சி செய்யப்பட்ட உமியில் 95 சதவிகித சிலிக்கா மற்றும் 22 சதவிகித சாம்பலும் உள்ளன.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உமி கொதிகலன்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இது விவசாயத்தில் மண் வளத்தை மேம்படுத்தவும், மண்ணில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவும் உதவுகிறது.
பல நாடுகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது அதனை சமாளிக்க ஏர் கண்டிஷனர் பயன்படுத்தப்படுகிறது. வெப்பத்தைக் குறைக்க மிகச்சிறந்த மாற்றாக உமி உதவுகிறது. நெல் உமியைப் பயன்படுத்தி வந்தால் வீட்டின் வெப்பநிலையைக் குறைக்க முடியும் என பனாமா நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதன்படி வீட்டின் மேல் உமியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பலகையை வைத்தால் வெப்பம் வீட்டிற்குள் இறங்காது.
ஒரு டன் நெல் உமி 7,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகவும் அரிசி உமி பயன்படுவதால், அடுத்த 5 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அதிகளவில் சிலிக்கா மற்றும் பொட்டாசியம் இருப்பதால், மண்ணின் கட்டமைப்பை மாற்றவும் உதவுகிறது.
வெறும் கழிவுதான் என நாம் அலட்சியமாய் நினைக்கும் உமிதான், இன்று மேலை நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பயன்பாட்டில் இருக்கிறது. மேலும், இது விவசாயத்திற்கும் உதவுவதால், நெல் உமியை இனி நாமும் பயன்படுத்த முயற்சிப்போம்.