
பறவைகளிலேயே மிகத் தனித்துவம் வாய்ந்த க்ளேசியர் ஃபின்ச் (Glacier finch) பறவைகள் பனிக்கட்டியில் கூடு கட்டும் பண்பைப் பெற்றது. இதை, ‘வெள்ள சிறகு டையூகா ஃபின்ச்’ என்றும் அழைக்கிறார்கள். இது தென் அமெரிக்காவில் ஆன்டிஸ் மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தது. இந்த மலைச்சிகரத்தில் சுமார் 4000 மீட்டர் உயரத்தில் இந்த வினோத பறவை ஐஸ்கட்டியில் கூடு கட்டுகிறது.
இவ்வளவு உயரத்தில் பிராண வாயு குறைவாகவே இருக்கும். மேலும், குளிர் உடலை நடுக்கும். ஆனாலும், இந்தச் சூழலில் இப்பறவை இதற்கு நன்றாக தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பனிக்கட்டி மீது கூடு கட்டுவதில் திறமையை வெளிப்படுத்துகிறது. வழு வழுப்பான பனிப்பாறையில் கூடுகட்டி குஞ்சுகளை மிகவும் கவனமாகக் காக்கிறது.
இங்கு இப்பறவைகளைத் தாக்க எந்த எதிரியும் வர முடியாததாகவும், மேலும், தெர்மோரெகுலேஷன் என்ற சூழலாலும் இந்த இடம் க்ளேசியர் ஃபின்ச் பறவைக்கு ஏற்றதாகத் திகழ்கிறது. இது மேலும் பொலிவியா, சிலி மற்றும் பெருவிலும் காணப்படுகிறது. இந்த இடங்களில் பிராண வாயு குறைவு. மேலும், தாவர வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும். இப்படிப்பட்ட சூழலிலும் தன்னைப் பழக்கப்படுத்தி, இப்பறவைகள் வாழ்வது இயற்கையின் அதிசயமாகும்.
பறவைகளிலேயே ஐஸ்கட்டியில் கூடு கட்டும் பறவை இது ஒன்றுதான். இந்தக் குளிர்ச்சியான சூழல் குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைக்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு இப்பறவை ஏன் பனிக்கட்டியை தேர்வு செய்துள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த சூழல் மிதமான மைக்ரோ சூழலாக இருப்பதால் இப்பறவை இதை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என நம்புகிறார்கள். மற்ற எந்தப் பறவைகளுக்கும் சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்கியிருக்கிறது இந்த க்ளேசியர் ஃபின்ச் பறவை. இங்கு கிடைக்கும் கொட்டை மலைச் செடிகள் மற்றும் சிறு பூச்சிகளை உண்டு இப்பறவை வாழ்கிறது.
மேலும், ஐஸ்கட்டியில் கூடு கட்டும் இப்பறவைகளின் இறக்கைகள், பாசி மற்றும் புற்களைக் கொண்டு மிக அழகான கூடு கட்டுவது தனித்தன்மையானதாகும். சூழலுக்கேற்றபடி இப்பறவை இனங்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்வதை இது நிரூபிக்கிறது. பனி உருகும் சமயம் இவற்றுக்கு கூடு கட்டுவதில் சிரமம் ஏற்படுவதால் இந்தப் பறவை இனம் குறைந்து வரும் ஆபத்தும் உள்ளதாக அறியப்படுகிறது.
பூமியின் எந்தப் பகுதியிலும் முயற்சி இருந்தால் வாழ முடியும் என்பதை நிரூபிக்கிறது இப்பறவை. இதன் அசாத்திய துணிவும் முயற்சியும் கடின உழைப்பும் பாராட்டத்தக்கவை.