சூப்பில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. சூப்பராகவும் மாஸாகவும் சூப் செய்து அசத்த 12 டிப்ஸ் இதோ!!
1. சூப் செய்யும்போது அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பார்லி வாட்டரைக் கலந்து தயாரித்தால் சூப் தனி ருசியுடன் இருக்கும்.
2. பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சுவையான சத்து நிறைந்த சூப் தயார்.
3. முற்றிய வெண்டைக்காய்களை தூக்கி எறிந்து விடாதீர்கள். அவற்றை பயன்படுத்தி சுவையான சூப் செய்யலாம். வெண்டைக்காயுடன் மிளகு, சீரகம், தக்காளி, வெங்காயம், பருப்பு வேக வைத்த தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
4. குழந்தைகளுக்காக சூப் செய்யும் போது, துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
5. கீரைகள், ப்ரக்கோலி, சோயா அல்லது முட்டைக்கோஸ் பயன் படுத்தி சூப் செய்யும் போது சூப் தயாரான பிறகு தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் சேர்க்க வேண்டும்.
6. முட்டைக்கோஸை நறுக்கும் போது, அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாதீர்கள், அவற்றைப் பொடியாக நறுக்கி, பின்னர் எண்ணையில் வதக்கி சூப்பில் சேர்த்தால் சுவையான, சத்தான சூப் ரெடி.
7. சூப்பில் போடுவதற்கு கைவசம் க்ரீம் கைவசமில்லையா? சிறிது வெண்ணையில் சிறிது பாலைக் கலந்து, இதையே க்ரீமுக்குப் பதிலாக பயன் படுத்தலாம். வித்தியாசமே கண்டு பிடிக்க முடியாது.
8. பொதுவாக எந்த விதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால், சூப் நல்ல கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
9. கொள்ளு, காராமணி வேக வைத்த நீரைக் கொட்டாமல் சுவயான சூப் செய்யலாம்.
10. எந்த வகை சூப் செய்தாலும் அதன் சுவை அதிகரிக்க க்ரீம் பயன்படுத்த வேண்டும்.
11. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, உடம்பில் இரும்புச்சத்து அதிகரிக்க முருங்கைக் கீரை சூப் செய்து சாப்பிட்டு வரவேண்டும்.
12. தக்காளி சூப்பில் போட பிரட் துண்டுகள் இல்லாத போது ஜவ்வரிசி வடாம் பொரித்து, உடைத்து சிறுசிறு துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.