
பலாப்பழ குறுமா
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் (சின்னதாக நறுக்கியது) – 2 கப்
வெங்காயம், தக்காளி, மிளகாய் தலா _2 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
குழம்பு மசாலாதூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
காரம்மசாலா – ½ டீஸ்பூன்
தேங்காய்பால் – 1 கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை: முதலில் சற்று காயாக இருக்கும் பலாப்பழத்தை தண்ணீரில் சுத்தம் செய்து, கொட்டை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளி, மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனை நன்றாக கலக்கி, மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இதில் நறுக்கப்பட்ட பலாப்பழத்தை சேர்த்து, கலக்கவும்.
பலாப்பழம் நன்றாக மசாலாவில் இறங்கி, சிறிது பசையாக மாறும். இதனுடன் தேங்காய் பாலை சேர்த்து, நன்றாக கலக்கவும். இது கெட்டியாகி குறுமாவாக மாறும் வரை தீயை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி நறுக்கி போட்டு அலங்கரிக்கவும் பலாப்பழ குறுமா தயார். இதனை சூடாக பரிமாறவும்.
பலாப்பழ உருண்டை
தேவை:
பலாப்பழம் (நறுக்கி அரைத்தது) – 1 கப்
அரிசிமாவு – 1 கப்
தேங்காய் (கீறி பொடியாக நறுக்கியது) – ½ கப்
வெல்லப்பொடி – 1 கப்
ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு – 10
பாதாம்பருப்பு – 10
செய்முறை:
முதலில், நறுக்கி அரைத்த பலாப்பழத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் வெல்லப்பொடி சேர்த்து நன்றாக கலக்கி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு தவாயில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே தவாயில், பாலாப்பழக் கலவையை கொட்டி தொடர்ந்து கிளறி, பின்னர் அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவை கெட்டியாகி உருண்டு மாறும் போது, இதில் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை அடுப்பில் இருந்து எடுத்து, சிறிது ஆறியதும் சிறு உருண்டைகள் போல உருட்டி எடுக்கவும். பலாப்பழ உருண்டை தயார். இதனை நெய் தடவப்பட்ட பாத்திரத்தில் அடுக்கி வைத்து, பரிமாறவும்.
பலாப்பழ பாயாசம்
தேவை:
பலாப்பழம் (நறுக்கி அரைத்தது) – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
சர்க்கரை – ½ கப்
ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
திராட்சை – 10
குங்குமப்பூ – சில
செய்முறை: முதலில், பாசிப்பருப்பை நன்றாக கழுவி, 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும். அடுப்பில் பாசிப்பருப்பை மிக சிறிது தண்ணீருடன் வேகவைக்கவும். பாசிப்பருப்பு மென்மையாகி வரும் வரை சிம்மில் வைத்து வேக விடவும். வேகவைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே பாத்திரத்தில், நெய்யை சூடாக்கி, முந்திரியும் திராட்சையையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கி அரைத்த பலாப்பழக் கலவையை சேர்த்து, மிதமான தீயில் மென்மையாகி வரும் வரை வதக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
இதில் தேங்காய் பாலும் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்கவிடவும். சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து, முழுமையாக கரையும் வரை கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரியையும் திராட்சையையும் சேர்த்து கலக்கவும். விருப்பமானால், குங்குமப்பூவை சேர்த்து அலங்கரிக்கவும்.