3 வகை மொறு மொறு ஸ்நாக்ஸ்... 15 நிமிடத்தில் செய்து அசத்துவோமா?

Nei Kadalai, Onion Samosa, Rava Snacks
Nei Kadalai, Onion Samosa, Rava Snacks

ம் எல்லோருக்குமே மொறு மொறு என்று இருக்கும் ஸ்னாக்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுவும் மாலை பொழுதில் டீ காப்பியுடன் சாப்பிட வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

1) நெய்க் கடலை:

தேவையான பொருட்கள்:

 • கடலைப்பருப்பு கால் கிலோ 

 • உப்பு தேவையானது

 • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

 • மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்

 • சாட் மசாலாத்தூள் 1 ஸ்பூன்

 • எண்ணெய் பொரிக்க

செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற விடவும். நீரை முற்றிலும் வடித்து ஒரு காட்டன் துணியில் போட்டு பத்து நிமிடங்கள் ஈரம் போக உலர விடவும். நன்கு காய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து ஊறிய கடலைப்பருப்பை கொஞ்சம் கொஞ்சமா போட்டு கரகரப்பாக ஆகும் வரை பொரிக்கவும். நடு நடுவே அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும். நன்கு பொரிந்து ஓசை அடங்கியதும் எடுத்து விடவும்.

சூடாக இருக்கும் போதே அதில் தேவையான உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், சாட் மசாலா பொடி தூவி நன்கு கலந்து விடவும். ருசியான மொறுமொறுப்பான நெய் கடலை தயார். எப்போதும் இந்த நெய் கடலையை கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். இதனை வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்.

2) டீக்கடை வெங்காய சமோசா:

தேவையான பொருட்கள்:

 • கோதுமை மாவு ஒரு கப் 

 • மைதா மாவு ஒரு கப் 

 • உப்பு சிறிது 

ஸ்டஃப்பிங் செய்ய: 

 • வெங்காயம் 2 

 • பச்சை மிளகாய் 2

 • கறிவேப்பிலை சிறிது

 • கொத்தமல்லி சிறிது

 • உப்பு

 • காரப்பொடி

 • மைதா பேஸ்ட்

செய்முறை:

இரண்டு ஸ்பூன் மைதாவில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவு மைதா மாவு இரண்டும் கலந்து செய்யலாம் இல்லையென்றால் கோதுமை மாவு மட்டும் சேர்த்து செய்யலாம். தேவையான உப்பு போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தண்ணீர் கொஞ்சம் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.

வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நீள நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு உப்பு சேர்த்து கிளறவும். பொரிக்கப் போகிறோம் என்பதால் இதனை ரொம்ப வதக்க வேண்டிய அவசியம் இல்லை. காரப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

சின்ன சின்ன சப்பாத்திகளாக இட்டு மடித்து உள்ளே வெங்காய மசாலாவை  வைத்து மூடி மைதா பேஸ்ட் தடவி நன்கு ஒட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மணமான, ருசியான வெங்காய சமோசா ரெடி.

3) கரகர ரவா ஸ்னாக்ஸ்:

தேவையான பொருட்கள்:

 • ரவை ஒரு கப் 

 • உப்பு தேவையானது 

 • மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

 • மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் 

 • சர்க்கரை அரை ஸ்பூன் 

 • அரிசி மாவு 2 ஸ்பூன் 

 • எண்ணெய் பொரிக்க

செய்முறை:

அடி கனமான வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள், காரப்பொடி சேர்த்து நடுக்கொதி வந்ததும் ரவையை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும். நன்கு வெந்து வந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

இதையும் படியுங்கள்:
அக்கார வடிசல் கோவில் பிரசாதம் வீட்டிலேயே செய்யலாமே!
Nei Kadalai, Onion Samosa, Rava Snacks

தண்ணீர் கொஞ்சமாக விட்டு பிசைந்து கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு தட்டில் ரொம்ப மெல்லியதாக இல்லாமல் சிறிது கனமாக கையால் தட்டவும்.

இதனை கத்திக் கொண்டு நமக்கு விருப்பமான வடிவில் கட் பண்ணி 2 இன்ச் அளவில் நீள நீளமாக கட் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ஓசை அடங்கியதும் வெளியில் எடுத்து ஆறியதும் டப்பாவில் பத்திரப்படுத்த முறுமுறுப்பான மாலை ஸ்நாக்ஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com