அற்புத பலன்கள் தருமே 3 கீரைப் பொடி வகைகள்!

keerai podi vagaikal...
keerai podi vagaikal...
Published on

கீரை என்றாலே பல்வேறு சத்துக்கள் நிரம்பியது என்பது அனைவருக்கும் தெரியும். சிலருக்கு ஃப்ரஷ் ஆக கீரையை சமைத்து சாப்பிட முடியாமல் இருக்கும். அது போன்ற கீரை வகைகளை கிடைக்கும்போது கீழ்கண்டவாறு பொடி செய்து வைத்துக்கொண்டால் அனைத்திற்கும் உபயோகமாக இருக்கும். சத்துக்கு சத்து, ருசிக்கு ருசி எல்லாவற்றிற்கும் மேலாக நன்றாக சாப்பிட்டோம் என்ற திருப்தி மூன்றும் இந்த மூன்று வகை கீரை பொடிகளில் கிடைக்கும். அதைப் பற்றி செய்முறையில் காண்போம். 

முடக்கறுத்தான் கீரை:

தேவையான பொருட்கள்:

முடக்கறுத்தான் கீரை  -மூன்று கைப்பிடி

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு  தலா- கால் கப்

மிளகு, சீரகம் மல்லிவிதை தலா- ஒரு ஸ்பூன்

வர மிளகாய் - எட்டு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முடக்கத்தான் கீரையை பறித்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் நனைத்து நிழலில் உலர்த்த வேண்டும். 

பருப்பு மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வெறும் வானலியில் வறுத்து கீரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இளம் சூடான தண்ணீரில் கீரையை நனைத்து எடுப்பதால் அதன் பச்சை வாடை வராது. இந்த பொடியை இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். 

நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்தும்  சாப்பிடலாம். மூட்டு வலிகளை நன்கு கண்டிக்கும் தன்மை உடையது இந்தக் கீரைப் பொடி. மேலும் இந்தக் கீரை பொடியை தோசை, அடை, சப்பாத்தி மாவுகளில் கலந்தும் பதார்த்தங்கள் செய்து சாப்பிடலாம். 

தூதுவளை:

தேவையான பொருட்கள்:

தூதுவளை- நான்கு கைப்பிடி

துவரம் பருப்பு ,கடலைப்பருப்பு தலா- கால் கப்

மிளகு- ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

மல்லி விதை -ஒரு டேபிள் ஸ்பூன்

வர மிளகாய்- 4 

உப்பு- தேவையான அளவு

பெருங்காயம் -சிறிய துண்டு

விரலி மஞ்சள் சிறிய துண்டு

தூதுவளைக் கீரையை உப்பு சேர்த்து  கழுவி வெந்நீரில் நனைத்து நன்றாக நிழலில் உலரவிடவும். 

எண்ணெயில் மஞ்சள் மற்றும் பெருங்காயத்தை பொரித்தெடுத்து வைக்கவும். நெய்யில்   லேசாக தூதுவளைக் கீரையை  புரட்டி எடுத்துவிட்டு, மிளகு, சீரகம், தனியாவை வறுத்தெடுக்கவும். 

வெறும் வாணலியில் பருப்பு வகைகளை வறுக்கவும். எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடித்து எடுத்து பாட்டிலில் அடைக்கவும். சளி பிடிக்கும் சமயங்களில் இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சளியை கண்டிக்கும். மஞ்சள் சேர்த்து இருப்பதால் நீண்ட நாட்கள் கெடாது. அது தொண்டை புண்ணையும் ஆற்றும்.

வல்லாரை:

தேவையான பொருட்கள்:

வல்லாரைக்கீரை -மூன்று கைப்பிடி

கடலைப்பருப்பு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு-தலா கால் கப்

குண்டு வர மிளகாய்- ஆறு

உப்பு- தேவையான அளவு

பூண்டு பற்கள் -நான்கு 

ஆம்ச்சூர் பவுடர்- சிறிதளவு

இதையும் படியுங்கள்:
இந்த 5 ஃபேஷன் டிப்ஸ்ஸை பின்பற்றினால் ஸ்லிம்மாக தெரிவீர்கள்!
keerai podi vagaikal...

செய்முறை:

வல்லாரைக் கீரையுடன் மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து வெந்நீரில் அலசி நிழலில் உலர்த்தவும். 

பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து, பூண்டு பற்களை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு உலர்ந்த கீரையுடன் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து பாட்டிலில் கொட்டி வைக்கவும். 

ஆம்சூர் பவுடர் இல்லை என்றால் மாங்காயைத் துருவி வெயிலில் உலர்த்தி எடுத்து அந்த துருவலை இதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 

வல்லாரைக் கீரைப் பொடியை எண்ணெய், நெய்விட்டு பிசைந்து சாப்பிட வேண்டியதுதான். படிக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால் நல்ல ஞாபகத்திறன் கூடி வரும். அனைவரும் சாப்பிட்டு நினைவுத்திறனை பெருக்கிக் கொள்ளலாம். வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பொடியை கொடுக்காமல் இருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com