
சர்க்கரை வள்ளி சாதம்
தேவை:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
சாதம் - 3 கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்தூள், மிளகு சீரகத்தூள் சேர்த்து மசித்த கிழங்கை இதனுடன் சேர்த்து கிளறவும். இதை சாதத்துடன் சேர்ந்து கிளறினால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம் தயார்.
******
சர்க்கரைவள்ளி கிழங்கு பஜ்ஜி
தேவை:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 3
கடலை மாவு, பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா கால் கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கைதோல் நீக்கி வட்டங்களாகவோ, சதுரங்களாகவோ, செவ்வகங்களாகவோ நறுக்கவும். மாவுகளை ஒன்றாகக் கலந்து, உப்பு, மிளகு சீரகத்தூள் சேர்த்து, சிறிது நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். நறுக்கிய வில்லைகளை தயாரித்த பஜ்ஜி மாவில் தோய்த்து தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொறு மொறு சர்க்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி தயார்.
******
சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்
தேவை:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 4
பச்சரிசி மாவு - 4 ஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 6
வரமிளகாய் - 2
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கேரட், பீன்ஸை நறுக்கி வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய் தாளித்து, மசித்த கிழங்கு, வெந்த காய்கறிகளை போட்டுக் கிளறவும். இதனுடன் உப்பு, மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வடைகளாகத் தட்டி, பச்சரிசி மாவில் புரட்டி, தோசைக்கல்லில் மூன்று நான்காகப் போட்டு, ரோஸ்ட் செய்து எடுக்கவும். சுவையான சக்கரை வள்ளி கழங்கு கட்லெட் தயார்.
*******
சர்க்கரைவள்ளி கிழங்கு சாம்பார்
தேவை:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 3
துவரம் பருப்பு - 1 கப்
கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு - தலா அரை ஸ்பூன்
வரமிளகாய் - 3
சாம்பார் பொடி - 3 ஸ்பூன்
புளிக்கரைசல் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு தாளித்து, புளிக்கரைசலை ஊற்றவும்.
இதில் உப்பு, சாம்பார் பொடி சேர்க்கவும். கொதிக்கும் போது சர்க்கரைவள்ளி துண்டுகளை போடவும். நன்கு கொதித்ததும், வெந்த துவரம் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். இந்த சாம்பார், சாதத்தில் பிசைந்து கொள்ளவும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.