
தினை அரிசி ரெசிபிகள் நான்கு
1. தினை அரிசி லட்டு
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 1 கப்,
வெல்லத்தூள் - 1 கப்,
நெய் - அரை கப்,
பாதாம், முந்திரி - தலா 6
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
தினை அரிசியை வெறும் வாணலியில் போட்டு, மணம் வரும் வரை வறுத்து, ஆறியதும், மிக்சியில் நைசாக பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, உருகியதும், தினை மாவை சேர்த்து, பழுப்பு நிறம் வரும் வரை வறுத்து, கிளறி இறக்கி வைக்கவும். பின்னர் அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து, லட்டுகளாக பிடிக்கவும். சுவையான, சத்தான தினை லட்டு தயார்.
2. தினை தோசை
தேவையான பொருட்கள்:
தினை அரிசி – ஒரு கப்,
உளுந்தம் பருப்பு - கால் கப்
பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
தினை அரிசி, உளுந்தம் பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி இவற்றை இரண்டு மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் உப்பு கலந்து அரைக்கவும். இரண்டு மணி நேரம் மாவை புளிக்க விட்டு, பிறகு தோசைக் கல்லில் மாவை ஊற்றி, தோசைகளாக வார்க்கவும். மொறுமொறுப்பான தினை தோசை தயார்.
3. தினை அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
தினை - 1 கப் உளுந்து மாவு
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
தாளிக்க - கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை
மல்லித்தழை - சிறிது
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம் பருப்பு, தினை அரிசி இரண்டையும் இரண்டு பங்கு நீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து, தனித்தனியாக வேக வைக்கவும். வெந்ததும் இரண்டையும் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி, தினை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கினால், மணமான, சத்தான தினை பருப்பு சாதம் தயார்.
4. தினை பொங்கல்
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
மிளகு, சீரகம் - தலா ஒரு ஸ்பூன்,
முந்திரி - 8
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
தாளிக்க - கடுகு, கருவேப்பிலை
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
தினை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்து, நீர் விட்டு, மஞ்சள் தூள் கலந்து குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, முந்திரிப் பருப்பை வறுத்து, வெந்த பொங்கலில் சேர்த்து, அதனுடன் உப்பு கலந்து கிளறி, இறக்கி வைத்தால், சுவையான, சத்தான தினை அரிசி பொங்கல் தயார்.