
ஆஷாட ஏகாதசி இம்மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வியாச பூர்ணிமாவுக்கு முன்னதாக வருவது ஆஷாட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளான இதனை, ‘தேவசயனி ஏகாதசி’ என்றும் கூறுவர். மகா ஏகாதசி, பத்ம ஏகாதசி, தேவபோதி ஏகாதசி என்றும் அழைக்கப்படும் இந்த நாளில் மகாவிஷ்ணு யோக நித்திரைக்குச் (உறங்கச் செல்வதாக) செல்வதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பகவான் தனது யோக நித்திரையிலிருந்து விழிப்பதாகக் கருதப்படுகிறது. சயனி ஏகாதசி சதுர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
பண்டரிபுரத்தில் ஆஷாட ஏகாதசி: ஆஷாட ஏகாதசி என்பது அன்னை, தந்தையரை போற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்தும் நாளாகக் கூறப்படுகிறது. இந்நாளில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணி தேவியுடன் விட்டலனுக்காக பாண்டுரங்கனாகக் காட்சியளித்தார். எனவே, ஆஷாட ஏகாதசி பண்டரிபுரத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆஷாட ஏகாதசி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். 700 வருடங்களுக்கும் மேலாக பக்தர்கள் இந்நாளில் பல இடங்களிலிருந்தும் பண்டரிபுரத்திற்கு ஆயிரக்கணக்கில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
17 நாட்கள் நடைபெறும் நிகழ்வு: புகழ் பெற்ற 'பண்டர்பூர் வாரி யாத்திரை' 17 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இதில் துறவிகளின் உருவங்களைக் கொண்ட பால்கிகள் (பல்லக்குகள்) எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு அபங்கங்களைப் பாடிக்கொண்டு பாண்டுரங்கனின் தரிசனத்தை நோக்கி மக்கள் வெள்ளமென செல்வர். வைணவ மடங்களில் இந்நாளில் 'தப்த முத்ரா தாரணை' என்ற முத்திரைகளை அணியும் வழக்கமும் உண்டு. இந்நாளில் மக்கள் நாசிக்கில் கோதாவரி நதியில் நீராடக் குவிவார்கள்.
பந்தர்பூர் யாத்திரை: பந்தர்பூர் யாத்திரை ஆஷாட ஏகாதசி அன்று (ஜூலை 6) முடிவடைகிறது. மகாராஷ்டிராவில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. புனேவுக்கு அருகிலுள்ள தேஹுவைச் சேர்ந்த துக்காராம் மகாராஜின் பால்கி, ஆலந்தியைச் சேர்ந்த சாந்த் ஞானேஷ்வரின் பால்கி (பல்லக்கு) மற்றும் பல்வேறு துறவிகளின் வெள்ளிப் பாதுகைகளை சுமந்து கொண்டு ஏராளமான பால்கிகள் (பல்லக்குகள்) 21 நாட்கள் பயணத்துக்குப் பிறகு பந்தர்பூரில் உள்ள பகவான் ஸ்ரீ ஹரிவிட்டல் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். இவர்கள் விட்டலனின் புகழைப் பாடியபடி கால்நடையாகவே நடந்து சென்று பகவானின் தரிசனத்திற்காக கோயிலை அடைவார்கள்.
புண்டரீகனின் சேவை: புண்டரீகன் பெற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய கிருஷ்ண பகவான், புண்டரீகனின் குடிசைக்கு வந்து வாசலில் நின்று கூப்பிட, பெற்றவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த புண்டரீகன் தனது வீட்டு வாசலில் வந்து நின்ற கிருஷ்ண பகவானை கவனிக்காமல் ஒரு செங்கல்லை போட்டு அதில் கிருஷ்ண பகவானை நிற்கச் செய்தான். தனது பெற்றோருக்கு செய்யும் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவன், பிறகு வெளியில் வந்து வந்தது யார் என்ற உண்மை தெரிந்ததும் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டான்.
ஸ்ரீ கிருஷ்ணரோ, ‘‘பெற்றவர்களுக்கு செய்யும் சேவை தெய்வத்திற்கு செய்யும் சேவையை விட உயர்ந்தது. இதை உணர்த்தவே இப்படி ஒரு லீலையை செய்தேன். இனி இந்த இடம் 'பண்டரிபுரம்' என்று அழைக்கப்படும். எல்லோரும் உன்னையும் விட்டல் என்று அழைத்து, உன்னிடம் என்னையே தரிசிப்பார்கள். பெற்றவர்களுக்கு செய்த சேவையால் மகத்தான புண்ணியத்தை அடைந்து விட்டாய். இங்கு வந்து தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும்’ என்று அருளிச் சென்றார்.
பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாகக் கோயில் கொண்ட நாள்தான் ஆஷாட ஏகாதசி. இந்நாளில் பகவானை விரதம் இருந்து வழிபட, அளவற்ற நன்மைகளைப் பெறலாம்.