
பழங்களின் ராஜாவான மாம்பழம் வருகை தரும் காலம் இது. பல வகைகளில் அதை சமைத்து, சுவைக்கலாமே.
மாம்பழ பர்பி
தேவை:
நார் இல்லாத மாம்பழச்சாறு - 2 கப்
பால்கோவா - 2 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - சிறிது
செய்முறை:
மாம்பழச்சாறை அடிகனமான பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்து காய்ச்சவும். கெட்டியானதும், பால்கோவா சேர்த்து கிளறவும். சர்க்கரையை முதிர் பாகாக காய்ச்சி பழ கலவையில் சேர்க்கவும். பர்பி பதம் வந்ததும், மெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான மாம்பழ பர்பி தயார்.
மாம்பழ போளி
தேவை:
கனிந்த இனிப்பான மாம்பழம் மூன்று
நாட்டு சர்க்கரை 3 கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
நெய் ஒரு கப்
குங்குமப்பூ சிறிது
மைதா மாவு இரண்டு கப்
உப்பு ஒரு சிட்டிகை
செய்முறை:
மைதாமாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும். மாம்பழங்களை தோல் நீக்கி துண்டுகளாகி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து கனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கெட்டியாகி அல்வா போல் ஆனதும் குங்குமப்பூ சேர்த்து இறக்கி வைக்கவும் மைதா மாவை உருண்டைகளாக உருட்டி அப்பளங்களாக இடவும். மாம்பழ பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டி அப்பளத்தில் வைத்து, இன்னொரு அப்பளத்தால் மூடி, தட்டி,அழுத்தி இணைக்கவும். தோசைக் கல்லில் ஒவ்வொரு போளியாக போட்டு வேகவைத்து எடுக்கவும். மாம்பழ சீசனில் இதை செய்து சுவைப்போமே.
மாம்பழ குழம்பு
தேவை:
மாம்பழம் - 2
புளி கரைசல் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
வெந்தயம், உளுந்தம் பருப்பு தலா - 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு ஒரு சிட்டிகை
வரமிளகாய் - 2
செய்முறை:
மாம்பழங்களை துண்டுகளாக்கி வைக்கவும். வாணலியில் வெந்தயம், உளுந்தம் பருப்பு, மிளகாயை வறுத்து பொடிக்கவும். அதே வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மாம்பழத் துண்டுகளை போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளிக்கரைசலை விடவும். உப்பு அரைத்த பொடி சேர்த்து கொதித்ததும் இறக்கினால், தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தகுந்த சுவையான மாம்பழக் குழம்பு தயார்.
மாம்பழ பச்சடி
தேவை:
கனிந்த மாம்பழம் - 2
தயிர் -2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 ஸ்பூன்
கடுகு கறிவேப்பிலை - தாளிக்க
பச்சை மிளகாய் - 2
கடுகு, சீரகத்தை வறுத்து செய்த பொடி - 1 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
மாம்பழங்களை தோல் நீக்கி, துண்டுகளாக்கி நன்கு பிசையவும். தயிரில் உப்பு, கடுகு சீரகப்பொடி, மாம்பழத் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். ஒரு கரண்டியில் நெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி, மல்லித்தழை தூவி, பரிமாறவும். சுவையான மாம்பழ பச்சடி தயார்.