தேவை
வேப்பம் பூ - அரை கப்
உளுந்து - அரை கப்
கடலைப் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மேற்கண்டவற்றுள் உப்பை தவிர ஏனைய பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து ஆறவைக்கவும். நன்கு ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பையும் உடன் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். சுவையான வேப்பம் பூ பொடி தயார்.
இதனை தினமும் உங்களது அன்றாட சிற்றுண்டியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழியும்.
தேவை
வேப்பம்பூ - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 3 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு பொன்னிறமாக ஆகும் வரை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் வேப்பம் பூவை கழுவி சுத்தம் செய்து போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பம்பூ, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தும் ஆறிய உடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சுவையான வேப்பம்பூ துவையல் ஆரோக்கியமான முறையில் தயார். சுடு சாதத்தில் இதை பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தேவை
கடலைப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் -2
பூண்டு பற்கள் - 10
இஞ்சி -சிறிய துண்டு
சோம்பு - ஒரு தே.கரண்டி
புளி - சிறிதளவு
வெல்லம் - ஒரு துண்டு
வேப்பம்பூ - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதனை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, வேப்பம்பூ, வெல்லம், புளி, உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வேப்பம்பூ வடை தயார்.
தேவை
வேப்பம் பூ - 4 டீஸ்பூன்
வெண்ணெய் - 4 டீஸ்பூன்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.
இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம். கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.