நம் தமிழ்நாட்டின் மாநில பழம் இந்த பலாப்பழம்! நம் அனைவருக்கும் பிடித்த நல்ல இனிப்பான சுவையான பழம். அப்படிப்பட்ட பலாப்பழங்களை ஒரு சில நேரங்களில் நாம் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் பலாக்கொட்டைகளில் புரதம், வைட்டமின் ஏ, மாவுச்சத்து போன்றவைகள் அடங்கியுள்ளன. இது நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இப்படிப்பட்ட இந்த பலாக்கொட்டைகளை இனிமேல் தூக்கி எறியாதீர்கள்! பலாக்கொட்டைகளை வைத்து என்னவெல்லாம் செய்வது என்பதை பார்ப்போம்!
பொதுவாக நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் பலாக்கொட்டையை சுடுவது. ஆனால் பலாக்கொட்டையை சுட்டு சாப்பிடும் போது அதன் சுவையோ தனி சுவை! அதேபோல் பலாக்கொட்டைகளை மிதமான சூட்டில் நன்கு வறுத்து சாப்பிடுவதும் ஒரு தனி சுகம் தான்!
பலாக்கொட்டைகளை வெயிலில் உலர்த்திவிட்டு பின் நன்கு கழுவி, நன்கு வேகவைத்து அதன் மேல் உள்ள தோலை எடுத்துவிட்டு, ஆறியப்பின் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து விட்டு, அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வட சட்டியில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொண்டு தேவைக்கேற்ற உப்பு சேர்த்து அதனுடன் அரைத்த பழக்கொட்டையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது பலாக்கொட்டை பொடிமாஸ் ரெடி!
பலாக்கொட்டைகளை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, கறிக்குழம்பு செய்வது போல் கறிக்கு பதிலாக பலாக்கொட்டையை சேர்த்து சமைத்தால் நன்றாக இருக்கும். அதேபோல் சுட்ட அல்லது வேகவைத்த பலாக்கொட்டைகளை சாம்பாரில் போட்டால் கூட அருமையாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் புளிக்குழம்பு செய்யும் பொழுது காய்கறிகளோடு, பலாக்கொட்டைகளையும் சேர்த்து வேக வைத்து குழம்பு செய்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.
பலாக்கொட்டைகளை நன்கு வேக வைத்து தோலை உரித்து விட்டு கொட்டைகளை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், நறுக்கிய பலாக்கொட்டைகளை சேர்த்து தண்ணி ஊற்றாமல் நன்கு வதக்கவும். பின் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூளை சேர்க்கவும். இப்போது பலாக்கொட்டை வறுவல் ரெடி!
“இனிமேலு பலாப்பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கி போடாதீங்க! மேல சொன்ன மாதிரி செஞ்சு பாருங்க! நல்லா இருக்கும்!”