திரைப்படத்தில் காட்டப்படும் சில உணவுகளைப் பார்க்கும் போது அதை எப்படியாவது சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஆசைத்தோன்றும். அப்படி திரைப்படத்தில் காட்டப்பட்டு பிறகு பிரபலமான 5 உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
90ஸ் கிட்களுக்கு ஜூராசிக் பார்க் திரைப்படம் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தந்த படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் காட்டப்பட்ட டைனோசர்களை வாயை பிளந்துக் கொண்டு ஆர்வமாக பார்த்திருப்போம். ஜூராசிக் பார்க் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறுமி பச்சை நிற ஜெல்லியை ஆசையாக எடுத்து சாப்பிட போவார். சரியாக அந்த நேரம் பார்த்து டைனோசர் வந்துவிடும். அப்போது டைனோசர் வந்த அதிர்வில் ஜெல்லி அதிர்ந்து ஆடும் அதை பார்த்து எத்தனை பேருக்கு அந்த ஜெல்லியை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது? 90ஸ் காலக்கட்டத்தில் ஜெல்லி மிட்டாய் மிகவும் பிரபலமாக விற்பனையானது.
ஹாரிப்பாட்டர், நார்னியா போன்ற பிரபலமான மாயாஜால படங்களை மறக்க முடியாது. நமக்கும் சிறுவயதில் இதுப்போன்ற மாயாஜால உலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும். நார்னியா படத்தில் சிறுவன் ஒருவன் சாப்பிடும் 'டர்கிஷ் டிலைட்' என்ற இனிப்பு பார்க்கவே அழகாகவும், நாவூர வைப்பதாகவும் இருக்கும். இந்த படத்திற்கு பிறகு டர்கிஷ் டிலைட் என்ற இனிப்பு மிகவும் பிரபலம் அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கொரியன் படங்களை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக 'ரேமன்' என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இது ஒரு நூடுல்ஸ் வகையை சார்ந்தது. கொரியர்களின் உணவுமுறை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவாக ரேமன் இருக்கிறது. மேலும் கொரியன் படங்களில் ரொமான்டிக் ஆன தருணங்களில் ரேமன் சாப்பிடுவது வழக்கம். இதனால் இந்த உணவு பிரபலம் அடைந்தது. விலை மலிவான கம்ஃபர்ட் உணவாக ரேமன் கருதப்படுகிறது. எனவே, உலகளவில் ரேமன் மிகவும் பிரபலமடைந்தது.
குங்ஃபூ பாண்டா திரைப்படத்தில் பாண்டா கரடி வாயில் போட்டு திணிக்கும் டம்பிளிங் பார்ப்பதற்கே மிகவும் சுவையாக தோன்றும். வெள்ளையாக உருண்டை வடிவில் உள்ளே சிக்கன் ஸ்டப் செய்யப்பட்ட டம்பிளிங்கை சாப்பிட வேண்டும் என்று நாவூரும். அந்த படத்தில் அதற்கு பெயர் 'டிரேகன் டம்பிளிங்' ஆகும். பாண்டா சுவைக்கும் போது பார்க்கும் நம்மையும் சேர்த்து அதற்காக ஏங்க வைத்துவிடும்.
'சூர்யவம்சம்' படத்தில் சமையலே செய்ய தெரியாத தேவயாணி வீட்டில் மிச்சம் இருக்கும் இட்லியை வைத்து தாளித்து போட்டு தன் அப்பாவிற்காக 'இட்லி உப்புமா' என்ற புது டிஷ்ஷை தயாரித்து அவசரத்திற்கு சாப்பிடக் கொடுப்பார். அந்த சமயத்தில் இட்லி உப்புமா தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இன்றும் நம் வீடுகளில் இட்லி மீந்துப்போனாலும், அவசரத்துக்கும் இட்லி உப்புமா செய்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்!