

கோடையில் வெப்பம் அதிகமாக இருப்பதால், காலை தயாரித்த உணவு மாலைக்குள் கெட்டுப்போகத் தொடங்கிவிடும். குறிப்பாக, வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால், உணவை சேமிப்பது மிகவும் கடினமாகிறது. கோடையில் சமைத்த உணவுகள் விரைவாக கெட்டுப் போகாமல் இருக்கும் 5 வழிமுறைகளை காண்போம்.
1. உணவை கலக்காதீர்கள்
உணவை அதிக நாட்கள் புதியதாக வைத்திருக்க வேண்டுமென்றால், காலை தயாரித்த பழைய உணவை மாலை தயாரித்த புதிய உணவுடன் கலக்கக் கூடாது. இரண்டு வெவ்வேறு உணவுப் பொருட்களை கலப்பதால் அவை கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன .
2. உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்
உணவை மீண்டும் மீண்டும் சூடாக்கினால், அது விரைவில் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதோடு, உணவின் சுவை கெட்டுப்போவதோடு, ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடும் என்பதால் திரும்பத் திரும்ப உணவை சூடுபடுத்தாதீர்கள்.
3. மசாலா பொருட்கள் தக்காளியை குறைக்கவும்
கோடையில் உணவு சமைக்கும்போது, குறைந்த அளவு மசாலா பொருட்களைப் பயன்படுத்துவதோடு தக்காளியை அதிகம் சேர்க்காமல் சமைக்கப் பழகுங்கள். சமையலில் தக்காளியை அதிகமாக பயன்படுத்துவதால் உணவு சில மணி நேரங்களிலேயே கெட்டுப்போகத் தொடங்கிவிடும் என்பதால் தக்காளியை அளவோடு பயன்படுத்துங்கள் .
4.உணவுப் பாத்திரங்களின் மூடி மிக முக்கியம்
கோடையில் உணவை சேமிக்கும்போது, அதன் மேல் வைத்த மூடி சரியாக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் . ஏனெனில் கோடையில் வெப்பத்தின் காரணமாக பலவிதமான பாக்டீரியாக்கள் காற்றில் பெருகத் தொடங்கும். இந்த பாக்டீரியாக்கள் ஒருமுறை உணவில் கலந்தால், அது உணவை விரைவில் கெடுத்துவிடும்.
5. தண்ணீரை பயன்படுத்தி சேமிக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவும். இப்போது இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் உணவுப் பொருட்களை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து, அந்தப் பாத்திரத்தை தண்ணீரில் வைக்கவும். இந்த குறிப்பு ஃப்ரிட்ஜின் வேலையை முழுமையாகச் செய்கிறது. இது மிகப்பழைய முறையாக இருந்தாலும் கோடைக்காலத்தில் உணவு கெட்டுப் போகாமல் இருக்க துணை புரிகிறது.
மேற்கூறிய ஐந்து முறைகளை கையாள கோடை காலத்தில் சமைத்த உணவுகளை பாதுகாக்கலாம்.