
பலருக்கும் பிடித்த இதமான காலநிலை கொண்ட குளிர் காலம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதே சமயத்தில் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படக்கூடிய நேரமும் இதுதான். நம்மை ஆரோக்கியமாகவும் சூடாகவும் வைத்திருப்பதில் நாம் உண்ணும் உணவுகள் பெரும்பங்கு வைக்கின்றன. அந்த வகையில் குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 வகை உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளான வெள்ளரிகள், கீரை மற்றும் தக்காளி போன்றவை நம் உடலை குளிர்வித்து செரிமானத்தை மெதுவாக்கும். ஏற்கனவே உடல் சூடாக இருக்க போராடுவதால் காய்கறிகளை பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் சூடான சூப் சாப்பிடுவது வயிற்றில் செரிமானத்தை எளிதாக்கி வெப்பத்தை அளிக்கிறது.
குளிர்ந்த பால்
பாலில் கால்சியம் சத்து நிறைந்து இருந்தாலும், குளிர்காலத்தில் குளிர்ந்த பால் அருந்தும்போது, சளி உற்பத்தியை தூண்டி இருமல், சளி மற்றும் மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இளநீர்
இளநீர் நீரேற்றமளித்து புத்துணர்ச்சியூட்டும் என்றாலும், அது கோடை காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் குளிர் காலத்தில் வெப்பநிலையை குளிர்வித்து குளிர்ச்சியடையச் செய்யும் என்பதால் இளநீரை குளிர்காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.
பழங்கள்
தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர் சத்துள்ள பழங்கள் குளிர்காலத்தில் செரிமானத்திற்கு தொந்தரவு செய்யும் என்பதால் அதற்கு பதிலாக ஆரஞ்சு, கொய்யா மற்றும் ஆப்பிள் போன்ற பருவ கால பழங்களை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் குளிர் மாதங்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.
அதிகமாக வறுத்த உணவு
எண்ணெய் உணவுகள் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, உடல் எடையை அதிகரித்து மந்தமான செரிமானத்திற்கு உள்ளாக்கி, பருவகால நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், ஆவியில் வேகவைத்த மற்றும் காற்றில் வறுத்த மாற்று உணவுகளை தேர்வு செய்வதே மிகவும் நல்லது.
புளிக்க வைக்கப்பட்ட உணவு
இட்லி, தோசை மற்றும் டோக்லா போன்ற புளித்த உணவுகள் லேசானவை, ஜீரணிக்க எளிதானவை. ஆனால் இவை குளிர்காலத்தில் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். குளிர் காலநிலை செரிமானத்தை மெதுவாக்குகிறது, மேலும் அதிக புளித்த உணவுகளை உட்கொள்வது வயிற்று உப்புசம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே புதிதாக சமைத்த, சூடான உணவுகளையே சாப்பிடுங்கள்.
தயிர்
தயிரின் குளிர்ச்சியூட்டும் பண்புகள் சளி மற்றும் இருமல் அறிகுறிகளை மோசமாக்கும் என்பதால் குளிர்காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக மோர் வடிவில் இஞ்சி, சீரகம் மற்றும் மசாலா பொருட்கள் கலந்து அருந்தலாம் .
மேற்கூறிய ஏழு உணவு பொருட்களுமே குளிர்காலத்திற்கு ஏற்றவை இல்லை என்பதால் அவற்றை சாப்பிடும்போது அதீத கவனத்துடன் சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.