
சோயா ஜவ்வரிசி தோசை:
சோயா 100 கிராம்
ஜவ்வரிசி 50 கிராம்
கறுப்பு உளுந்து 100 கிராம்
கம்பு 100 கிராம்
இட்லி அரிசி 100 கிராம்
உப்பு தேவையானது
கம்பை தனியாக கழுவி 6 மணி நேரம் ஊறவிடவும். கறுப்பு உளுந்து, ஜவ்வரிசி, இட்லி அரிசி, சோயா ஆகியவற்றைவையாகக் கலந்து 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அனைத்தையும் போட்டு தேவையான நீர் கலந்து அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும். ஒரு மணிநேரம் கழித்து தோசை வார்க்க சத்தான, சுவை மிக்க தோசை தயார். மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
காரமல்லி தோசை:
தோசை மாவு 2 கப்
சிகப்பு மிளகாய் 4
கொத்தமல்லி 1/2 கட்டு
உப்பு சிறிது
மல்லி இலை சிறிது
கொத்தமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் மிளகாய், கொத்தமல்லி, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிது கொத்தமல்லியை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவை ஒரு கரண்டி விட்டு மெல்லிய தோசையாக தேய்த்து நல்லெண்ணெய் விட்டு தட்டைப் போட்டு மூடி வேகவைத்துக் கொள்ளவும். ஒருபுறம் நன்கு வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மல்லி கார சட்னியைத் தடவி, மேலாக சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும் தூவி மடித்து சிறிது நெய் விட்டு பரிமாறவும். ருசியும் மணமும் மிக்க இந்த கார மல்லி தோசையை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பச்சை மிளகாய் கார சட்னி:
பச்சை மிளகாய் காரம்தான். என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றவை. அதன் காரம் தெரியாமல் சட்னி அரைக்க முடியும். சுவையான பச்சை மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பச்சை மிளகாய் 10
புளி நெல்லிக்காயளவு
உப்பு தேவையானது
வெல்லம் சிறு துண்டு
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
பச்சை மிளகாய் காம்பு நீச்சி நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு, புளி சேர்த்து கடைசியாக ஒரு கட்டி வெல்லமும் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து இரண்டு கிளறு கிளறி இறக்க மிகவும் ருசியான பச்சை மிளகாய் சட்னி தயார். இதனை இட்லி, தோசை, தயிர்சாதம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம்.