

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் பழங்கள் மிக முக்கியமானவை. நாம் தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உண்ணும் இந்தப் பழங்களைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
சில உண்மைகள் கேட்பதற்கே பொய்யைப் போலவும், நம்ப முடியாத வகையிலும் இருக்கும். ஆனால் அறிவியல் ரீதியாக அவை நூறு சதவீதம் உண்மையானவை. தாவரவியல் உலகில் மறைந்து கிடக்கும் விசித்திரமான சில ஆச்சரியமூட்டும் 8 உண்மைகளைப் பார்க்கலாம் வாங்க.
1. ஸ்ட்ராபெர்ரி ஒரு பெர்ரி அல்ல!
பெயரில் ‘பெர்ரி’ என்று இருப்பதால் ஸ்ட்ராபெர்ரியை நாம் பெர்ரி வகையைச் சேர்ந்தது என்று நினைக்கிறோம். ஆனால் தாவரவியல்படி அது பெர்ரி அல்ல. ஆச்சரியம் என்னவென்றால், நாம் சற்றும் எதிர்பார்க்காத வாழைப்பழம், தர்பூசணி மற்றும் பூசணிக்காய் ஆகியவைதான் உண்மையான பெர்ரி வகையைச் சார்ந்தவை. விதைகளைத் தோலுக்கு அடியில் உள்ள சதைப்பகுதிக்குள் பாதுகாத்து வைத்திருப்பவையே பெர்ரிகள் எனப்படும். ஸ்ட்ராபெர்ரியில் விதைகள் வெளிப்புறம் இருப்பதால் அது இந்தப் பட்டியலில் சேராது.
2. ஆப்பிள் தண்ணீரில் மிதக்கும்!
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஆப்பிளைப் போட்டால் அது மூழ்காமல் மிதக்கும். இதற்குக் காரணம் ஆப்பிளின் அடர்த்தி நீரை விடக்குறைவு என்பது மட்டுமல்ல. ஆப்பிளின் மொத்த எடையில் 25 சதவீதம் காற்று நிரம்பியுள்ளது. இந்த காற்றுப் பைகள்தான் ஆப்பிளைத் தண்ணீரில் மிதக்கச் செய்கின்றன.
3. அத்திப்பழத்திற்குள் இருக்கும் பூச்சி!
அத்திப்பழம் உருவாவதற்கு ‘அத்தி குளவி’ என்ற ஒரு சிறிய பூச்சியின் உதவி தேவைப்படுகிறது. பெண் குளவி பூவிற்குள் சென்று முட்டையிடும்போது, அதன் சிறகுகள் உடைந்து அங்கேயே இறந்துவிடும். அத்திப்பழத்தில் உள்ள ஒரு என்சைம் அந்தப் பூச்சியின் உடலைச் செரித்து, பழத்தோடு பழமாக மாற்றிவிடும். நாம் அத்திப்பழம் சாப்பிடும்போது, உண்மையில் அந்தப் பூச்சியின் புரதத்தையும் சேர்த்தே சாப்பிடுகிறோம்.
4. வாழைப்பழத்தில் கதிரியக்கம்!
கதிரியக்கம் என்றாலே நாம் அணுகுண்டு அல்லது அணுமின் நிலையங்களை நினைப்போம். ஆனால் நாம் விரும்பிச் சாப்பிடும் வாழைப்பழத்திலும் கதிரியக்கத் தன்மை உள்ளது. இதில் பொட்டாசியம்-40 என்ற ஐசோடோப்பு இருப்பதால் இது நிகழ்கிறது. ஆனால் பயப்படத் தேவையில்லை. இது மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத மிகக் குறைந்த அளவே உள்ளது.
5. அன்னாசி!
நாம் கடையில் மிக எளிதாக ஒரு அன்னாசிப்பழத்தை வாங்கி விடுகிறோம். ஆனால் அந்த ஒரு பழம் முழுமையாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகச் சுமார் இரண்டு வருடங்கள் வரை ஆகும். இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்து கிடைக்கும் ஒரே காரணத்தினால் தான் அன்னாசிப்பழம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
6. காய்கறிகள் அல்ல பழங்கள்!
சமையலறையில் நாம் பயன்படுத்தும் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை நாம் காய்கறிகள் என்றே அழைக்கிறோம். ஆனால் தாவரவியலின்படி, பூவிலிருந்து உருவாகி விதைகளைக் கொண்டிருப்பவை அனைத்தும் பழங்களே. எனவே நாம் தொழில்நுட்ப ரீதியாகப் பல பழங்களைச் சமைத்துச் சாப்பிடுகிறோம்.
7. திராட்சை Vs மைக்ரோவேவ்!
திராட்சைப் பழத்தை இரண்டாக வெட்டி மைக்ரோவேவ் அவனில் வைத்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா. அது ஒரு சிறிய வாணவேடிக்கையை நிகழ்த்தும். திராட்சையில் உள்ள எலக்ட்ரோலைட்கள் வெப்பத்தால் தூண்டப்பட்டு பிளாஸ்மா எனப்படும் நெருப்புப் பொறிகளை உருவாக்கும். எனவே இதைச் வீட்டில் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது.
8. ஆரஞ்சு நிறமா அல்லது பழமா!
ஆரஞ்சு என்ற நிறத்திற்குப் பெயர் வருவதற்கு முன்பே ஆரஞ்சுப் பழத்திற்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. பழத்தின் நிறத்தைப் பார்த்தே பிற்காலத்தில் அந்த நிறத்திற்கு ஆரஞ்சு என்று பெயரிட்டார்கள். அதற்கு முன்பு வரை அந்த நிறத்தை ‘மஞ்சள்-சிவப்பு’ என்றே மக்கள் அழைத்துவந்தனர்.