
முளைக்கட்டிய பாசிப்பயறு கத்தரி வடை
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் -ஒன்று
முளைகட்டிய பாசிப்பயறு -ஒரு கப்
கடலைப் பருப்பு -ஒரு கப்
பச்சை மிளகாய்- ஆறு
வர மிளகாய் -மூன்று
சோம்பு- ஒரு டீஸ்பூன்
கெட்டித் தயிர்- கால் கப்
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு தேவையான அளவு
அரிசி மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு ஆர்க்கு
செய்முறை:
ஊறவைத்த கடலை பருப்புடன் முளைவிட்ட பாசிப்பயறையும், சோம்பு, வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் கறிவேப்பிலையை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கத்திரிக்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும் , பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும். இவற்றை பருப்பு விழுதுடன் சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, தயிர், பச்சரிசி மாவையும் கலந்து பிசறி வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்ல மொறு மொறுப்பாக இருக்கும் இந்த வடை. சும்மாவே சாப்பிட்டு விடலாம். பிடித்தமான சட்னி ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். இதற்கு எந்தவிதமான கத்திரிக்காயை பயன்படுத்தி செய்தாலும் நன்றாக இருக்கும்.
கலவை மாவு, நட்ஸ் ஃப்ளேக்ஸ் கேக்:
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 100 கிராம்
கோதுமை மாவு -50 கிராம்
கடலை மாவு -50 கிராம்
சர்க்கரை- 150 கிராம்
வெண்ணெய் -50 கிராம்
சோயா மாவு -50 கிராம்
பால் பவுடர்- 150 கிராம்
கொக்கோ பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
நெய்- ஒரு டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் -ஒரு டீஸ்பூன்
நட்ஸ் ஃப்ளேக்ஸ்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
வெள்ளரி விதை -2 டீஸ்பூன்.
செய்முறை:
பாதாம், முந்திரி பருப்புகளை வறுத்து ஒன்று இரண்டாக பொடித்து வைக்கவும். அடிகனமான வாணலியில் பாதி அளவு வெண்ணையிட்டு மைதா, கோதுமை மாவு, சோயா மாவு, கடலை மாவு அனைத்தையும் பச்சை வாசனை போக வறுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்க்கவும். அதைக் கிளறிக் கொண்டே மைதா, கடலைமாவு, கோதுமை, சோயா மீதமுள்ள வெண்ணெய்அனைத்தையும் கலந்து சேர்த்து கிளறவும். மிதமான தீயில் சீராகக் கிளறினால் கெட்டியான பாகு பதத்தில் திரண்டு வரும். அப்போது பால் பவுடர், ரோஸ் எஸன்ஸ், கோக்கோ பவுடர், நட்ஸ் சிறிதளவு சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி இறக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை பரப்பி மேலே கொஞ்சம் வெள்ளரி விதை, நட்ஸ் ப்ளேக்ஸை தூவி அலங்கரித்து விரும்பிய வடிவில் கட் செய்ய வேண்டியதுதான். இதன் வண்ணமும், வாசமும், ருசியும் அனைவரையும் சாப்பிடத்தூண்டும்.
மாவு வகைகளை வறுக்கும்பொழுது கருகிவிடாமல் வதக்குவது அவசியம்.