வாழைப்பூ உருண்டை குழம்பு
வாழைப்பூ உருண்டை குழம்பு

சூடான சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான 'வாழைப்பூ உருண்டை குழம்பு' !

Published on

உணவில் அடிக்கடி வாழைப்பூவை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்ன் ஏ,பி1, சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப்பூவில் குழம்பு, அடை, சூப், பொரியல், கூட்டு, வடை என பல்வேறு வகையான உணவுகள் செய்யலாம். வாழைப்பூ உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருண்டை செய்ய...

வாழைப்பூ - சிறியது 1 (பொடியாக நறுக்கியது)
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்தமிளகாய் - 4
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்  
பூண்டு - 4 பல்  
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

குழம்பிற்கு...  

வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்  
புளி - நெல்லிக்காய் அளவு  
உப்பு - சுவைக்கேற்ப
முந்திரி- 10
தேங்காய் துருவல் - கால் கப்

தாளிப்பதற்கு...  

எண்ணெய் - 2 ஸ்பூன்  
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்

செய்முறை:

உருண்டை செய்ய ...

* கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்றாக அரைந்ததும் கடைசியாக வாழைப்பூவை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். தண்ணீர் நிறைய சேர்க்கக்கூடாது.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு செய்ய...

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
நாவூரவைக்கும் வாழைத்தண்டு சட்னி - பீட்ரூட் சட்னி செய்யலாமா?
வாழைப்பூ உருண்டை குழம்பு


* முந்திரி, தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி வதங்கும் போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறி, தக்காளி குழையும் வரை வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
ஐயப்பன் கோவில் அரவண பாயாசம் செய்யலாம் வாங்க! 
வாழைப்பூ உருண்டை குழம்பு


* அடுத்து அதில் வேக வைத்த வாழைப்பூ உருண்டைகளை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து (வாழைப்பூ உருண்டையில் உப்பு உள்ளது) மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, தேங்காய் பச்சை வாசனை போனவுடன் இறக்கினால், சூடான சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான வாழைப்பூ உருண்டை குழம்பு தயார்!

logo
Kalki Online
kalkionline.com