சொதப்பல் ராணி சமையல் ராணியாகத் திகழ சில குறிப்புகள்!

சாம்பார்...
சாம்பார்...
Published on

ன்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில சமயங்களில் சாம்பார் ரசம் பொரியல் குருமா போன்றவற்றில் உப்பு காரம் புளிப்பு  ஜாஸ்தியாகிவிடும். இதனால் அதன் சுவை குறைந்து ருசியே மாறிவிடும். இதற்கு சமாளிப்பு என்ற பெயரில் சிலவற்றை செய்ய சூப்பரான சுவையில் ரெடி ஆகிவிடும்.

கிரேவி வகைகளில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் தேங்காய் அல்லது முந்திரி பருப்பு சிறிது, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொதிக்க விட உப்பின் அளவு சீராகும்.

ரசத்தில் புளிப்பு கூடிவிட்டால் கவலைவேண்டாம்.  4 பூண்டு பற்கள், மிளகு 1 ஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து அரை கப் நீர் கலந்து ரசத்தில் விட்டு கலக்க சரியாகும்.

வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது உப்பு அல்லது காரம் கூடினால் இரண்டு வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் வறுத்து சேர்த்து சிறிது எலுமிச்சம் பழச்சாறும் கலந்துவிட உப்பு  காரம் மட்டுப்படுவதுடன் ருசியும் அதிகரிக்கும்.

இட்லி தோசைமாவில் உப்பு அதிகமானால் கவலைப்பட தேவையில்லை. ஒரு கரண்டி ரவையை வறுத்து ஒரு கப் பாலும் தண்ணீரும் கலந்துவிட்டு ஐந்து நிமிடம் ஊறவிடவும்‌. பின்பு இதனை இட்லிமாவில் சேர்த்து கலந்துவிட சரியாக இருக்கும்.

பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால் தேங்காயைத் துருவி சேர்த்து அத்துடன் அரை ஸ்பூன் சர்க்கரையும் கலந்துவிட சரியாகிவிடும். வத்தக் குழம்பு, காரக்குழம்பில் காரம் அதிகமானால் இரண்டு தக்காளியை வதக்கி அரைத்து சேர்த்து விட்டு கொதிக்க விட சரியாகும்.

கலந்த சாதம் செய்யும்போது உப்பு காரம் அதிகமாகி விட்டால் பொரித்த வற்றல் வடாம் அல்லது அப்பளத்தை தூளாக்கி சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறும் கலந்துவிட ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அன்பை அதிகமாக்கும் 3 தருணங்கள்!
சாம்பார்...

சப்பாத்தி பூரிக்கு செய்யும் உருளைக்கிழங்கு மசாலாவில் உப்பு காரம் அதிகமாகி விட்டால் அதிகம் புளிப்பில்லாத கெட்டி தயிரைக் கடைந்து சேர்க்கலாம் அல்லது தேங்காய் பால் சிறிது சேர்க்கலாம்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் வெந்த துவரம் பருப்பை சிறிது குழைத்து சேர்க்கலாம். வெந்த பருப்பு கைவசம் இல்லையென்றால் தனியா ஒரு ஸ்பூன், துவரம் பருப்பு ஒரு ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், தேங்காய் துருவல் ரெண்டு ஸ்பூன் வறுத்து அரைத்து சேர்த்து கொதிக்க விட மிகவும் ருசியாக இருக்கும்.

சாம்பார் பொடி அரைக்கும்போது சில சமயம் வெந்தயம் அதிகம் சேர்த்து அரைத்து விட்டால் சாம்பார் வைக்கும் போது சிறிது கசப்பு சுவை அதிகம் தெரியும். இதற்கு ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து இறக்க கசப்பு தெரியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com