

கடைக்குப்போக வேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் பண்ண வேண்டாம். கிச்சனில், எப்பவும் கை வசமிருக்கும் பொருட்களை வைத்து, மும்மாவு தோசை, முப்பருப்பு சட்னி பண்ணி, அறிவிப்பில்லாமல் வருகை தரும் விருந்தினரை அசத்தலாம்.
மும்மாவு தோசை
தேவை:
கோதுமை மாவு 1/2கப்
கேப்பை மாவு 1/2 கப்
கம்பு மாவு 1/2கப்
தோசை மாவு 1டீஸ்பூன்
சின்ன வெங்காயம் 8
மிளகு 1டீஸ்பூன்
சீரகம் 1டீஸ்பூன்
கறிவேப்பிலை10
உப்பு திட்டமாக
நெய், எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, கேப்பை மாவு, கம்பு மாவு, தோசைமாவு, சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸி ஜாரில் போடவும். தேவையான நீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் ஓடவிடவும். மாவு நுரைத்து நிற்கும். வெங்காயத்தை சின்ன ஜாரில் போட்டு நீர் விடாமல் மசித்து, மாவுடன் கலக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். கலந்த பின், மிதமான தீயில் தோசையாக வார்க்கவும்.
பவுலில், நெய்யையும், எண்ணெயையும் கலந்து வைத்துக்கொண்டு, ஸ்பூனில் எடுத்து, சுற்றிலும் விடவும். முறுகல் வாசம் வந்தவுடன் திருப்பிப் போட்டு, வெந்ததும் சூடாக இருக்கும்போதே, முப்பருப்பு சட்னி தொட்டு சாப்பிட செம ருசி. திடீர் விருந்தினருக்கு உடனே தயாரிக்க உகந்தது மும்மாவு தோசை.
கம்பு மாவு உடல் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உத்திரவாதமானது. கேப்பை மாவில், கால்சியம், இரும்பு சத்து கொட்டிக்கிடக்குது. கோதுமை மாவு, முதுகுவலி, மூட்டுவலியை விரட்டிவிடும்.
முப்பருப்பு சட்னி
தேவை:
கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2எண்ணம்
புளி சீடையளவு
பூண்டு 3 பல்
எண்ணெய் 2டீஸ்பூன்
உப்பு திட்டமாக
கடுகு, உளுந்தம்பருப்பு 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் பூண்டு பற்களைப் பொரித்து எடுக்கவும். பின் மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து எடுத்து விட்டு, மூன்று பருப்புக்களையும் போட்டு, மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். எல்லாவற்றையும் ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு, உப்பு, புளி சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
கூடுதல் ருசிக்கு சிறிது தேங்காய் சேர்க்கலாம். மும்மாவு தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சைட்டிஷ் முப்பருப்பு சட்னி. கடலை பருப்பில் உள்ள புரதசத்து தசைகளை வலுவாக்கும்.
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை விரிவடையச் செய்யும். உளுந்தம்பருப்பில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். பூண்டு பல், இதயத்தை பலமாக்கும். அப்புறமென்ன, விருந்தினரின் பாராட்டு மழையில் நனையலாம்.