
நாம் நம் வீட்டில் உள்ள நபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினந்தோறும் விதவிதமான ஸ்னாக்ஸ் மற்றும் சிற்றுண்டிகள் தயாரித்துக்கொடுத்து வந்தோமானால் வீட்டில் நமக்குக் கிடைக்கும் மரியாதை வேற லெவலில் இருக்கும். அதற்கு உதவக்கூடிய ஒரு குஜராத்தி ரெசிபியை இப்பதிவில் பார்க்கலாம்.
செட்டிநாடு ஸ்டைல் குஜராத்தி ஹேண்ட்வோ பைட் (Handvo Bite) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பச்சரிசி 2 கப்
2.பாசிப் பருப்பு 1 கப்
3.உளுத்தம் பருப்பு ¼ கப்
4.துவரம் பருப்பு ¼ கப்
5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
6.உப்பு தேவையான அளவு
7.மஞ்சள் தூள் ⅛ டீஸ்பூன்
8.மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
9.பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
10.பொடியா நறுக்கிய கேரட் பீன்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
11.நெய் 1 டேபிள் ஸ்பூன்
12.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
13.கடுகு, எள், கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு மணிநேரம் கழித்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து, பணியார மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் நறுக்கிய காய்கறி,
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிடவும். நெய்யையும் எண்ணெயையும் ஒன்றாக கலந்துவைக்கவும். பின் ஒரு குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் முக்கால் டீஸ்பூன் நெய் கலவையை ஊற்றவும். அனைத்திலும் ஒரு சிட்டிகை கடுகு, எள் மற்றும் நாலு கறிவேப்பிலை போட்டு வெடித்ததும், அரைத்து வைத்த மாவை கரண்டியில் எடுத்து குழியில் முக்கால் பாகம் நிறையும் அளவு ஊற்றவும். தேவைப்பட்டால் சுற்றிலும் மேலும் சிறிது நெய் கலவை ஊற்றி வேகவிடவும்.
பின், மறு பக்கம் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுத்துவிடவும். சூடான ஹேண்ட்வோ பைட்களை புதினா சட்னி தொட்டு உட்கொள்ள சுவையான, ஆரோக்கியம் நிறைந்த காலை
உணவாகும். மாலை நேர ஸ்னாக்ஸாகவும் இதை உட்கொண்டு மகிழலாம்.