
குட்டீஸ்களுக்கும், பெரிஸ்களுக்கும் பிடித்த ஐட்டங்கள் பல இருந்தாலும், புதுவிதமாக ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மைக்ரோ ஓவன் உபயோகிக்காமல், வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து சத்தான, ஒரு வட்ட வடிவமான, சற்றே Fluffyயான ஸ்பெஷல் ஸ்பான்ஞ் கேக் செய்தால், அனைவருக்கும் பிடிக்கும். அதன் செய்முறை இதோ…
தேவை:
நல்ல ரவை 1 கப்
காய்ச்சி ஆறவைத்த பால் 11/4 கப்
ஃப்ரெஷ் தேங்காய் துருவல் 1 கப்
நாட்டு சக்கரை (பொடித்தது) 1 கப்
உப்பு சிறிது
சமையல் சோடாப்பு 1/4 சிட்டிகை
ஒன்றிரண்டாக பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ் 1 கப்
உலர் திராட்சை 1/2 ப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ரவையை வாயகன்ற பௌலில் போட்டுக் கொள்ளவும்.
இதில் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு கப் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
இத்துடன், சிறிது உப்பு, சமையல் சோடா ஆகியவைகளை போட்டு நன்கு கலந்து ஒரு தட்டு போட்டு மூடி, சுமார் பத்து நிமிடங்கள் வைக்கவும்.
தேங்காய்த் துருவலை, மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
அடிக்கனமான வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், பொடி செய்த தேங்காய்த்துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுக்கையில், நாட்டு சக்கரையைச் சேர்க்கவும். இரண்டும் நன்றாக கலந்த பின், ஒன்றிரண்டாக உடைத்து வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஏலப்பொடியைப் போட்டு மிக்ஸ் செய்து இறக்கி வைத்து நன்கு ஆறவிடவும்.
மூடி வைத்திருக்கும் ரவையும் பாலும் நன்கு ஊறிச் சற்று கெட்டியாக சேர்ந்திருக்கும். மீதி கால் கப் பாலை இதில் விட்டு மீண்டும் ஒருமுறை கலந்துகொள்ளவும்.
3 அல்லது 4 மீடியம் சைஸ் வாட்டி அல்லது கப் எடுத்துக்கொண்டு அதன் உட்புறம் லேசாக நெய் தடவவும்.
ரவை-பால் மிக்ஸ் - இல் ஒரு கரண்டி எடுத்து கப்பில் விடவும். அதன் மேல் பரவலாக, அரைக் கரண்டி தேங்காய் - நாட்டு சர்க்கரை-ட்ரை ஃப்ரூட் மிக்ஸை போட்டு அதன் மீது மீண்டும் அரைக்கரண்டி ரவை மிக்ஸ் மாவை மூடினாற்போல் விடவும். இதுபோல் நான்கு கிண்ணங் களிலும் விட்டு தயார் செய்யவும். மேலே உலர் திராட்சைகளால் அலங்கரிக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு லேசாக சூடானதும் மேலே தட்டுப் போட்டு அதன் மீது ரெடியாக வைத்திருக்கும் நான்கு கிண்ணங்களையும் வைத்து மூடிவிடவும். சுமார் பத்து நிமிடங்கள் சென்று திறக்கவும்.
நன்றாக உப்பிக்கொண்டு இருக்கும் இந்த "ஹெல்த்தி Fluffy ஸ்பான்ஞ் ஸ்பெஷல்" கம-கமவென்று மணக்கும். ஒவ்வொரு கப்பாக எடுத்து ஒரு தட்டில் மெதுவாகத் தட்டவும். கத்தியால் மெதுவாக நடுவே கீறியெடுத்து சாப்பிடுகையில் அதன் சுவையே சுவை.