பொதுவாக, உடல் ஆரோக்கியத்தில் உணவு எத்தனை முக்கியப் பங்கு வகிக்கிறதோ, அதே அளவு தண்ணீரும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், நாம் அருந்தும் தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால், அதுவே, பலவித நோய்களை தோற்றுவிக்கும் காரணியாகவும் அமைகிறது. தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான் இதற்கான காரணமாகும்.
தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற கிருமிகளை அழிக்க அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சில உத்திகளைக் கையாண்டு உள்ளனர். அதில் ஒன்றுதான் செப்பு பாத்திரப் பயன்பாடு. அதாவது, இயற்கையாக தண்ணீரை சுத்தப்படுத்த செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
நீர்நிலைகளில் இருந்து கொண்டு வரும் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பருகினார்கள் நம் முன்னோர்கள். தண்ணீரை தேக்கி வைக்கும் நீர் நிலைகளில் செப்பு நாணயங்களை எறிந்து தண்ணீரை சுத்தப்படுத்தினார்கள். செப்புப் பாத்திரத்தில் ஊற்றி தண்ணீர் சேமிக்கப்படும்போது ஒருகுறிப்பிட்ட நேரத்திற்குள். கனிமத்தில் இருந்து அயனிகள் பெறப்படுகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் சேமிக்கப்படும்போது செம்பு அதன் சில அயனிகளை தண்ணீரில் பரிமாற்றம் செய்கிறது. இதன் காரணமாக தண்ணீரானது, கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெறுகிறது.
"பொதுவாக, செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடிப்பதால் உடலில் வரக்கூடிய சில நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது. இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்படத் தூண்டுகிறது. மேலும், இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்தும்போது ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகை தடுக்கப்படுகிறது.
செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது. இதனால், மூட்டு வலிக்கு சரியான மருந்தாக அமைகிறது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. செம்பு இரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்துகிறது. அந்த வகையில் செம்பு உடல் நலத்துக்கு உதவும் உலோகமாக செயல்படுகிறது.