சிப்ஸ் அல்லது ரொட்டி, பிரெட் டோஸ்ட்டுடன் எடுத்துக்கொள்ளும் மெக்சிகன் டிப் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. செய்வதும் எளிது.
ராஜ்மா பீன்ஸ் மற்றும் சல்சா சாஸுடன் சீஸ் சேர்த்து அந்த லேயர்ஸ் உருகும்வரை ஓவனில் வைத்து செய்யப்படும் இந்த லேயர்டு மெக்சிகன் டிப் (Dip) அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய அசத்தலான சுவையில் இருக்கும். 20 நிமிடங்களில் மிகவும் ருசியான இந்த மெக்சிகன் டிப்பை செய்து விடலாம்.
ராஜ்மா பீன்ஸ்:
ராஜ்மா 1/4 கப்
தக்காளி 2
பூண்டு 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
வெங்காயம் 1/2 கப்
தண்ணீர் 1 கப்
ராஜ்மாவை 4 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
ஒரு வாய் அகன்ற வாணலியில் எண்ணெயை சூடாக்கி கால் கப் வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். வெந்த ராஜ்மா கலவை, மிளகாய்தூள் 1/2 ஸ்பூன், சீரகத்தூள் 1/2 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். ஒரு கனமான கரண்டியால் நன்கு மசித்துவிட்டு தனியாக வைக்கவும்.
தக்காளி சல்சாவிற்கு:
வெங்காயம் 1/4 கப்
தக்காளி ஒரு கப்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் 2 ஸ்பூன்
ஆரிகனோ 1/2 ஸ்பூன்
உப்பு
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், தக்காளி கெட்ச்அப், ஆரிகனோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
லேயர்டு மெக்சிகன் டிப்:
ஒரு கண்ணாடி பௌலில் வேகவைத்த ராஜ்மா கலவையை விட்டு அதன் மீது தக்காளி சல்சாவை ஊற்றி கடைசியாக அதன் மேல் சீஸை சமமாக தூவவும். இதனை 10 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை பேக்கிங் வெப்பநிலை 200* C க்கு முன்கூட்டியே சூடேற்றப்பட்ட அடுப்பில் வைத்து எடுக்கவும். ரொட்டித் துண்டு அல்லது நாச்சோ சிப்ஸூடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும் இந்த லேயர்ட் மெக்சிகன் டிப்.
செய்துதான் பாருங்களேன்!