
கோடை வந்துவிட்டால் அனைவரும் சாலட் வகைகளை அதிகமாக விரும்புவோம். அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி செய்யும். கூடவே உடலுக்கு நல்ல குளுமையையும் தரும். அதற்கு மிகவும் உகந்த காய் வெள்ளரிக்காய். அதில் செய்யும் ஒரு சாலட் இதோ:
செய்ய தேவையான பொருட்கள்:
துண்டு துண்டாக நறுக்கிய வெள்ளரிக்காய், -2கப்
ஒரே சீராக துருவிய தேங்காய்ப் பூ- ஒரு கப்
கேரட் துருவல்- ஒரு கப்
வெங்காயம் -2 பொடியாக அரிந்து லேசாக எண்ணெயில் வதக்கியது
அவித்த பச்சை வேர்கடலை- 2 கப்
மல்லித்தழை-2 கைப்பிடி அளவு
பொடியாக நறுக்கிய -பச்சை மிளகாய்- 3
வறுத்து பொடித்த மிளகு, சீரகப்பொடி -தலா அரை ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு -2 டீஸ்பூன்
உப்பு- சிறிதளவு
செய்முறை:
வெள்ளரிக்காயுடன் உப்பும், மிளகு, சீரகத்தூள் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு ஒரு குலுக்கு குலுக்கிவிடவும். பின்னர் தேங்காய்ப் பூ, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வேர்க்கடலை, வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அப்படியே சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் இந்த வெள்ளரி சாலட்டை தேவையான அளவு எடுத்து சாப்பிட வெயிலுக்கு இதமளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும்.
சில குழந்தைகள் பச்சை வெங்காயம் சேர்த்தால் சாலட்டில் சாப்பிட மாட்டார்கள். அதற்கு பதிலாக அதை வதக்கி சேர்த்தால் அதன் நெடி மற்றும் காரத்தன்மை குறைந்து அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
பாகற்காய் வதக்கல்
செய்யத் தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய மிதிபாகல்- ஒரு கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று
தக்காளி நறுக்கியது- ஒன்று
தேங்காய் துருவல் அரைத்தது- ஒரு டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
வெல்லம் -2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
லெமன் சாறு -ஒரு டீஸ்பூன்
வறுத்து உடைத்த வேர்க்கடலை- ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார் பொடி, தேங்காய் துருவல், உப்புடன் பாகற்காயையும் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் தெளித்து கிளறிவிட்டு மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும். பின்னர் வெல்லப் பொடியை சேர்த்து அது கரைந்ததும் லெமன்சாறு கலந்து நன்றாக கிளறி, வதக்கலாக வந்தவுடன் வேர்க்கடலை தூவி பரிமாறவும். நீரிழிவு காரர்களுக்கு உகந்தது இது.