மூளைத் திறனுக்கு உதவும் சின்ன வெங்காயத் தொக்கு!

வெங்காயத் தொக்கு...
வெங்காயத் தொக்கு...Image credit - youtube.com
Published on

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டதாக அறியப்படும் "அல்லியேசியே" என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தின் அறிவியல் பெயர் அல்லியம் சீபா. இதன் தாயகமான தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியா வந்து இதன் மருத்துவ குணத்தால் பிரபலமடைந்து, தற்போது உலக சமையலில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

சின்ன வெங்காயத்தில் உடல் நலன் காக்கும் ஏராளமான விட்டமின் சத்துகளும், தாது உப்புக்கள் மற்றும் கால்ஷியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறதை அறிவோம்.

மேலும் கார்போஹைட்ரேட், புரதம், குறைந்த அளவு எரிசக்தி கொண்ட இதில் உள்ள ஃபோலேட்டுகள் மூளையின் ஹார்மோன் மற்றும் என்சைம்களை கட்டுப்படுத்தி மனஅமைதியைக் கொடுக்கிறது.

சரி. இத்தனை நல்ல பயன்கள் தரும் சின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடத் தந்தால் ஓடிவிடுபவர்கள்  அதையே சப்புக்கொட்ட வைக்கும் தொக்காக செய்து தந்தால் தினம் நிச்சயம் கேட்டு சாப்பிடுவார்கள்.

தேவை;
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 4 டே. ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1 டீஸ்பூன்
வெல்லம் - 2 டே. ஸ்பூன்
புளிக்கரைசல் - 1 கப்
நல்லெண்ணெய் - தேவையான அளவு அல்லது 3 குழிக்கரண்டி
உப்பு- தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - தாளிக்க
பெருங்காயம் ஒரு டீஸ்பூன்


செய்முறை;
தரமான சின்ன வெங்காயம் வாங்கி அதை நீரிலிட்டு (உரிக்க எளிதாக வரும்) தோலுரித்துக் கழுவி மிக்சியிலிட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது மற்றும் தேவையான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். வெங்காயம் என்பதால் தலபுலவென கொதித்து வெளியில் தெறிக்கும் என்பதால் மிதமான தீயில் வைத்துக் கவனமாக கிளறி விடவும். (மூடி போட்டு மூடினாலும் நல்லது).

இதையும் படியுங்கள்:
சிறுகதை - புதுப்புத்தகங்களுடன் புது அவதாரம்!
வெங்காயத் தொக்கு...

அதன் நீர் சுண்டியதும் அதில் தேவையான உப்பு மற்றும் வெல்லத்தை பொடிசெய்து போட்டு  அடிபிடிக்காமல் நன்கு கிளறவும் .தொக்கு நன்றாக சுருண்டு வரும்போது மேலே பெருங்காயத்தூள் தூவி சிறிது நேரம் சிம்மில் மூடிவைத்து எண்ணெய் மேலே பிரிந்து வந்ததும் இறக்கவும்.

இது தோசை, இட்லி, தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சூப்பரான  ஒரு தொக்காக இருக்கும். அதனுடன் சின்ன வெங்காயத்தின் நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

குறிப்பு-  மிளகாய்த்தூள் பயன்படுத்தவில்லை என்றால் காய்ந்த வரமிளகாய்களை மிக்சியில் அடித்தும் சேர்க்கலாம். நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது என்பதால் அதை பயன்படுத்துகிறோம். கடலை எண்ணெய் ரீபைண்ட் ஆயிலும் பயன்படுத்தலாம். புளிக் கரைசலும், வெல்லமும் அவரவர் ருசிக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com