சிறுகதை - புதுப்புத்தகங்களுடன் புது அவதாரம்!

Boy reading book...
Boy reading book...

-கமலா முரளி

ள்ளி விடுமுறை முடியப்போகிறது.

வகுப்பு ஆசிரியரிடம் இருந்து, குறுந்தகவல் வந்தது. புதிய புத்தகங்கள், கையேடுகள், சீருடை எல்லாவற்றையும் வாங்கிச் செல்ல வேண்டும் என!

இதோ, அப்பா அம்மாவுடன் கிளம்பிவிட்டான் ஷ்ரவண்.

பள்ளியில் அவனுடைய நான்காம் வகுப்பு ஆசிரியை மஞ்சுளா மேடம்தான் புத்தகங்களைத் தந்தார்.

“இங்க பாரு, ஷ்ரவண், கஷ்டப்பட்டாத்தான் முன்னேற முடியும். பாத்தியா, பணம் கட்டின சான்றைக் காட்டினா தான புத்தகம் கிடைக்குது !” என்றார் அப்பா.

“ஒவ்வொரு முறை புத்தகத்தைப் படிக்கும்போதும், நல்லாப் படிச்சுப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கணும். நல்லாப் படிக்கணும், புரிஞ்சுதா ?”அம்மா.

தலையை ஆட்டினான் ஷ்ரவண்.

நிதானமான மதிப்பெண்களுடன் சராசரிக்கு மேலான மாணவன் ஷ்ரவண். கூச்ச சுபாவமும், லேசான பயமும் அவனது ‘குரல் வழித் தேர்வுகளில்’ குறைவான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்தது.

“தினமும், வீட்டில வாயை விட்டுப்படி” என்றார் மஞ்சுளா டீச்சர்.

அவ்வளவுதான். அன்று முழுவதும் அம்மாவும் அப்பாவும் அது பற்றி நிறைய பேசினார்கள். சண்டை இட்டார்கள். ஷ்ரவணுக்கு அறிவுரை கூறினார்கள்.

'வாய் விட்டு படித்தல்' தினமும் அரைமணி நேரம் நடை பெறும். அம்மா அல்லது அப்பா மேற்பார்வையில் என்று முடிவாயிற்று.

ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் ஒரு மாதம் இந்த முடிவு செயல்படுத்தப்படும் என்பது அவர்களுக்கே தெரியும் !

அதைப் போலவே, முதல் நாளே, “சரி, ஷ்ரவண், இன்னைக்குத்தான புத்தகங்கள் வந்திருக்கு ! இன்னைக்கு நீ சும்மா எல்லா புக்ஸையும் புரட்டிப் பாரு ! “ என்று சொல்லிவிட்டு அம்மா சமையலைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

ஷ்ரவணுக்கு ரொம்ப சந்தோஷம் ! அவனும் புதுப் புத்தகங்களும் தனியாக ! இந்த நொடிக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தான் ஷ்ரவண் !

புதுப் புத்தகங்களை முகர்ந்து பார்ப்பது அவனுக்கு ரொம்ப பிடித்த விஷயம் !

இதையும் படியுங்கள்:
தயக்கமும் பயமும்தான் நம் முதல் எதிரி!
Boy reading book...

புதுப்பொலிவுடன் இருந்த அட்டைப்படங்களை மெல்லத் தடவி, பக்கங்களைப் புரட்டி, மூக்கில் வைத்து முகர்ந்தான்.

திடீரென ஒரு பக்கத்தில்,புதுப்புத்தக வாசனை தவிர நல்ல நெய் வாசனை வருவது போல் இருந்தது.

மீண்டும் மோந்து பார்த்தான். ஆமாம், நெய் வாசனை தான் !

சடசடவென முன்னும் பின்னுமாகப் பக்கங்களைத் தள்ளி மோந்து பார்த்தால், புதுபுத்தக வாசம்தான் வந்தது.

எந்தப் பக்கத்தில் நெய் வாசனை வந்தது ?

திரும்ப முதலில் இருந்து, உத்தேசமாகத் திருப்பினான்.

ஹா ! நெய் வாசனை ! 19 ம் பக்கத்தில் ! பக்கத்தின் எண்ணை உற்றுக் கவனித்தான். 19 !

“ஷ்.. ஷ்.. ஷ்ரவ்”

யார் குரல் ? புத்தகப் பக்கம் அவனிடம் பேசுகிறதோ?

ஷ்ரவணுக்குப் படபடப்பாக இருந்தது.

“பயப்படாத ஷ்ரவண்! நான் உன் ஃப்ரெண்ட் தான் ! “

”ஃப்ரெண்டா ?” தன்னைச் சுற்றிப் பார்த்தான். யாருமில்லை. புத்தகத்தில் இருந்துதான் குரல் வருகிறது.

“ஷ்ரவண், நா உனக்கு ஹெல்ப்பா இருப்பேன். என் பேரு ராஜு ! “

ராஜுவின் குரல் இனிமையாக இருந்ததால், ஷ்ரவண், அதிகம் பயப்படவில்லை. இருந்தலும் அந்தப் பக்கத்தைத் திருப்பி விட்டான்.

நெய் வாசனையும் போனது. ராஜுவின் குரலும் நின்றது.

சிறிது நேரம் கழித்து, ஷ்ரவண் வேறு ஒரு புது புத்தகத்தை எடுத்து, வாசம் நுகர ஆரம்பித்தான்.

பத்தொன்பதாம் பக்கத்தைப் பார்த்தால் என்ன ?

அதே நெய் வாசனை.

பக்கம் 19 . அவன் கை அந்த எண்ணைத் தடவியது. என்ன அதிசயம் !

ஒரு தெளிவான, அழகான முகம் ஷ்ரவணுக்குத் தெரிந்தது.

புன்னகையுடன், மலர்ச்சியுடன், “ஹாய் ! ஷ்ரவண் ! “ என்ற குரல் ! ராஜூவின் குரல்தான் !

”பயப்படாத” என்று ராஜூ சொன்னாலும், அதற்குத் தேவையே இல்லாததுபோல, ஷ்ரவணும், சிரித்து, “ஹாய், ரா… ராஜு !” என்றான்.

“எல்லா புக்லயும் இருப்பியா ?”

“ம்ம் ! 19 ம் பக்கம் ! உனக்கு மட்டும்தான் ! “

“ஏன் நெய் வாசம் ? எனக்கு புது புஸ்தக வாசம்தான் புடிக்கும்.” ஷ்ரவண்.

“புது புஸ்தக வாசனை கொஞ்ச நாள்தான இருக்கும்.

என் வாசம் எப்பவும் இருக்கும்” ராஜூ.

“நீ என்ன பூதமா ?”

“இல்ல , நா ஒரு புத்தக தேவதை ! சிறுவர்களின் நண்பன் “ ராஜு.

“என்னோட விளையாடுவியா ?”

“நிச்சயமா… வேர்ட் பில்டிங் விளையாடலாமா ?”

ஆங்கிலத்திலும் தமிழிலும், மூன்றெழுத்து, நான்கெழுத்து வார்த்தை விளையாட்டு !

“ராஜூ ! எனக்கு இந்த ஜன்னலில் அதோ.. அந்தக் கடைசி கம்பி வரை ஏற வேண்டும். நீ ஹெல்ப் பண்ணுவியா ?”

ஷ்ரவண் பொதுவாக, ஒரே ஒரு கம்பி ஏறி விட்டு, குதித்து விடுவான்.

இன்று ராஜூ, மேல் கம்பியில் இருந்து அவனுக்குக் கை கொடுத்து, ஆதரவாக இழுத்துக் கொள்வது போல உணர்ந்தான்.

கடைசிக் கம்பி வரை ஏறி விட்டான்.

“மெதுவாக,ஒவ்வொரு கம்பியாக இறங்கு” என்ற ராஜுவின் குரலுக்குத் தலையாட்டும் நேரத்தில், அம்மா அறைக்குள் வந்தாள்.

“ஹேய் ! ஷ்ரவண்! அய்யய்யோ ! பாத்து பத்திரம் ! மெதுவா ! டொப்ப்ன்னு குதிச்சுடாத ! “ என்றாள்.

ஷ்ரவண் அம்மா சொன்ன சொற்களைக் கவனிக்க வில்லை.

“ம்ம்… அடுத்த கீழ்க் கம்பில கால வை…. அங்கதான் ! தைரியமா … “ ராஜுவின் குரல்தான் அவனுக்குள் கேட்டது.

அழகாக இறங்கிவிட்டான்.

“அப்பா ! புள்ளயாரப்பா ! எம் புள்ளயக் காப்பாத்திட்ட ! ஷ்ரவன், மேல ஏறி நின்னுட்ட ! எனக்கே பயமாயிடுச்சு ! வா! கொஞ்சம் தண்ணி குடி ! “

அம்மா அவன் கையைப் பிடித்தாள். ஷ்ரவணுக்கு எவ்வித பயமும் இல்லை என்பது அவன் கையைப் பிடித்தபோதே அம்மாவுக்குப் புரிந்தது.

இதையும் படியுங்கள்:
பயத்தை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
Boy reading book...

ராஜுவுடன் சேர்ந்து தினமும் வாய் விட்டுப் படித்தான் ஷ்ரவண். வாய்ப்பாடுகள் ஒப்புவித்தான். செய்யுள் படித்தான்.

“எனக்கு தனியா சைக்கிள்ல தெருவில போக பயமாயிருக்குடா ராஜு ! “

“”நா வரேன் உன் கூட ! இன்னிக்கி சைக்கிள் ஓட்டலாம் வா” என்றான் ராஜு.

புத்தகத்தை எடுத்து, 19ம் பக்கத்தில் எண்ணைத் தொட்டு, ராஜுவை ஆக்டிவேட் செய்துவிட்டு, சைக்கிளின் முன்கூடையில் வைத்தான் ஷ்ரவண்.

“அம்மா, கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிவிட்டு வருகிறேன்”

அம்மாவுக்கு ஓரே வியப்பு !

என்ன ஆயிற்று இந்தப் பயலுக்கு ! சைக்கிள் ஓட்ட நாங்க இல்லாம போக மாட்டான் !

கொஞ்ச நாளாவே தானா சத்தம் போட்டுப் படிக்கிறான். தைரியமா வாலுத்தனம் பண்ணுறான் !

ஷ்ரவண் அப்பாவுக்கு அவ்வளவு ஆச்சரியமாக இல்லை.

பயந்த சுபாவாமாக இருந்தான், ‘தியாகு’ என்ற புத்தகத் தேவதையைச் சந்தித்தபின், முழுக்க மாறிப்போன கதையை, புதுப் புத்தகங்கள் வாங்கப் போவதற்கு முதல் நாள் ஷ்ரவணுக்குக் கூறியிருந்தார்.

புதுப்புத்தகங்களுடன் புது அவதாரம் எடுத்து விட்டான் ஷ்ரவண் .

இப்போதெல்லாம், ‘குரல் வழித் தேர்வுகளில்’ நல்ல மதிப்பெண் ஷ்ரவணுக்கு !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com