
வறுத்த பச்சரிசி மாவு ஒரு கப் வீதம் ஒவ்வொரு உணவுக்கும் எடுத்துக்கொள்ளலாம். முன்னோர்களின் பாரம்பரிய உணவு வகைகளாகிய...
உளுந்துக்களி: கால் கப் தோலுடன் கூடிய உடைந்த உளுந்துடன் ஒரு ஸ்பூன் வெந்தயம், 15 பல் பூண்டு சேர்த்து நன்கு கழுவி குக்கரில் வேகவைக்கவும். பின்னர் ஒரு கப் அரிசி மாவில் தேவையான உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வெந்த உளுந்துடன் ஊற்றி கிளறி கொதித்ததும் சிறு தீயில் வைத்து கிளறவும். வெந்து கெட்டியாகி வரும் வேளையில் உப்பு சரிபார்த்து ஒரு கப் தேங்காய் துருவல், 3 ஸ்பூன் இடித்து சலித்த சுக்குத்தூள் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்த களியை நன்கு ஆறியப் பிறகு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
மாவு அடை (போலு): ஒரு கப் அரிசி மாவு எடுத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அரை கப் தண்ணீர் ஊற்றி விரவி சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து வைத்துக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டை யையும் உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டி கொள்ளவும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தடவி தட்டி வைத்த வட்ட போலுகளை பரத்தி வைத்து மீடியமான தீயில் வேக வைக்கவும். பொன்னிறமாக வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும். மாலை நேரத்தில் கருப்புக்கட்டி சுக்கு காஃபியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய் பால் உருண்டை: ஒரு கப் அரிசி மாவில் தேவையான உப்பு சேர்த்து அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பக்குவத்தில் விரவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கப் தேங்காய் துருவலில் 2 கப் தேங்காய் பால் எடுத்து வாணலியில் ஊற்றி கொதிக்கவைத்து அத்துடன் உப்பு மற்றும் சிறு உருண்டைகளை சேர்த்து கிளறி உருண்டைகள் வெந்ததும் இறக்கி ஆறவைத்து சாப்பிட அருமையான சுவையுடன் இருக்கும்.
கழி கஞ்சி: கால் கப் முழு பச்சைபயறு எடுத்து கழுவி நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு லிட்டர் பதனீரை ஒரு வாணலியில் ஊற்றி நன்கு காய்த்து சிறிது வற்றி வரும் வேளையில் அத்துடன் ஒரு கப் அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை சிறு தீயில் வைக்கவேண்டும்.
மாவு வெந்து வரும் வேளையில் வேகவைத்த பச்சைப் பயறை சேர்த்து கிளறி அத்துடன் 2 கரண்டி சுக்குத்தூள் மற்றும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும். மிகுந்த சுவையும், சத்தும் நிறைந்த ஆரோக்கியத்தையும் தர வல்லதாகும். அனைத்து உணவுமே செய்வதற்கு எளிதானவை. வயிற்றுக்கும் நல்லது.