
கறுப்பு உளுந்து சாதம்
தேவை:
கருப்பு உளுந்தம் பருப்பு - அரை கப்
பச்சரிசி - 2 கப்
தாளிக்க - தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன், கடுகு, சீரகம், வரமிளகாய் 2
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காய தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
கருப்பு உளுந்தம் பருப்பையும், அரிசியையும் களைந்து வைக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வர மிளகாய் தாளித்து, நீரை வடித்து விட்டு உளுந்தம் பருப்பை போட்டு கிளறவும். பிறகு களைந்த பச்சரிசியையும் சேர்த்து, உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வேகவைத்து எடுத்தால், சுவையான, சத்தான கருப்பு உளுந்து சாதம் தயார்.
முருங்கைக்கீரை பொடி சாதம்
தேவை:
முருங்கைக்கீரை - 2 கப்
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 2 ஸ்பூன்
வர மிளகாய் -2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாயை வறுத்து பொடிக்கவும். இதனுடன் உப்பு மற்றும் பொடித்த கீரையை போட்டு, சூடான சாதத்தில் நெய் சேர்த்து, தேவைக்கேற்ப பொடியை போட்டு பிசைந்து எடுத்து வைக்கவும். சுவையான முருங்கைக்கீரை பொடி சாதம் தயார்.
தேங்காய் புளியோதரை
தேவை:
புளி - நெல்லிக்காய் அளவு
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் 2
தாளிக்க - கடுகு, நிலக்கடலை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், புளி, தேங்காய் துருவல் போட்டு வறுத்து, கரகரப்பாக பொடிக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து, நிலக்கடலையை வறுத்து, அரைத்த பொடியை சேர்த்துக்கிளறி, உப்பு சேர்த்து, சாதத்தில் விட்டுப் பிசையவும். வித்தியாசமான சுவைகொண்ட தேங்காய் புளியோதரை தயார்.
ஆரஞ்சு சாதம்
தேவை:
ஆரஞ்சு சாறு -அரை கப்
தாளிக்க - கடுகு கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நிலக்கடலை - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலையை வறுத்து, நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். இறக்கி வைத்து, ஆரஞ்சுசாறு, உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து, பிசையவும். சுவையான ஆரஞ்சு சாதம் ரெடி. நார்த்தங்காய் சாறிலும் இதேபோல் செய்யலாம்.