
அறுசுவைகளில் காரச் சுவையும் ஒன்று. உப்பு, காரம், இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு என அறுசுவை பொருட்களையும் உணவில் பயன்படுத்தும்பொழுது நோய்கள் நம்மை எளிதில் அண்டாது. இதில் நமக்கு பிடிக்கும் என்பதால் இனிப்பு அதிகமாகவோ அல்லது புளிப்பு மிகுந்த பொருட்களை அதிகமாகவோ எடுத்துக்கொள்ளாமல் எல்லாம் அளவோடு எடுத்துக் கொள்வது சிறந்தது.
இந்த அறுசுவையில் காரச்சுவை நல்லது என்றதும் மிளகாய் தூள், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் என்று எண்ண வேண்டாம். காரச்சுவை மிகுந்த மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை. காரச்சுவை கொண்ட பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் சூடு அதிகமாகும், வயிற்றில் எரிச்சல், புண்கள் ஏற்படும். எதையும் அளவுடன் பயன்படுத்துவது நல்லது.
காரச்சுவை மிகுந்த இஞ்சி சமையலில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி துவையல் ரசம் இஞ்சி குழம்பு என செய்து அசத்தலாம். சளி இருமல் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு மிளகைப் பொடித்து ஓமம், துளசி, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் சேர்த்து கஷாயமாக எடுத்துக் கொள்ளலாம். மிளகு ரசம், மிளகு சாதம் என சிறிது நெய் சேர்த்து உண்ண உடலுக்கு நன்மை தரும்.
காரச்சுவை பசியை தூண்டும். செரிமானத்திற்கு ஏற்றது. ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். எடை குறைப்பிற்கும் உதவும். நுரையீரலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது. நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மிளகை கஷாயமாகவோ, பொடித்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவோ செய்வது நல்லது. காரச்சுவை உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுவதால் சிறுநீரகங்களுக்கும் நல்லது.
கடுகு மற்றும் வெங்காயம் சமைக்கும்பொழுது அதன் காரச்சுவை வெளிப்படும். எத்தனை வகையில் உணவுகள் தயாரித்தாலும் அவை அறுசுவைக்குள் தான் அடங்கும். அறுசுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். உடல் இயக்கத்திற்கு முக்கியமான தாதுக்களுடன் அறுசுவைகளும் கூடி உடலை நன்கு வளர்க்க பயன்படுகிறது. துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்யும். இனிப்பு தசைகளை வளர்க்கும். கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்கும். கசப்பு நரம்பை பலப்படுத்தும். புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்யும். உவர்ப்பு நம் உமிழ் நீரை சுரக்கச் செய்யும்.
காரச்சுவையை அறவே தவிர்ப்பது ஆரோக்கியமானதல்ல. காரச்சுவை மலத்தை இளக்கும். வலிமையை பெருக்கும். குடல் புழுக்களை அழிக்கும். சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு காரத்தை கொடுத்து பழக்க வேண்டும். சிலர் என் குழந்தை காரமே சாப்பிட மாட்டான் என்று பெருமையாக சொல்வார்கள். இது தவறு. இனிப்பு மட்டுமே சாப்பிடும் குழந்தைகளுக்கு குடல் புழுக்கள், சளி, இருமல், அலர்ஜி போன்ற தொல்லைகள் ஏற்படும். மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற காரச்சுவையை உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அறுசுவையும் சேர்ந்த உணவு பொருள் ஒன்று உண்டு. அது தமிழ் வருட பிறப்பன்று செய்யப்படும் வேப்பம்பூ பச்சடி. வேப்பம்பூவை நசுக்கி நெய்யில் வறுத்து அத்துடன் வெல்லம் என்ற இனிப்பு சேர்த்து, மாங்காய் என்ற புளிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், உப்பின் துவர்ப்பும், காரத்திற்கு மிளகாயும் என்று அறுசுவைகளும் சேர்த்துசெய்யப்படுவது அருமையான சுவையில் இருக்கும்.