
நீளநீளமாக நறுக்கிய உருளைக்கிழங்குகளை தண்ணீரில் வேகவைக்காமல், இட்லித்தட்டில் பரப்பி, சரியாக மூன்று நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பிறகு, சோளமாவு, அரிசிமாவு கலந்து பொரித்தால் மொறுமொறுப்பான ஃ ப்ரென்ச் ஃப்ரை ரெடி.
உருளைக்கிழங்கை சீவி உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் நீரை வடித்து உலர்த்தி எண்ணெயில் வறுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
அடைக்கு மாவு அரைக்கும்போது, இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, அடைக்கு மாவு அரைக்கும்போது சேர்த்தால் அடை சுவையோ சுவை.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது, சிறிதளவு சோம்பைத்தூளாக்கித் தூவலாம். வருவலின் மணமும், சுவையும் தூக்கலாக இருக்கும்.
பூரிக்குத் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசால் செய்யும்போது, மற்றப் பொருட்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் சுவையும், மணமும் அதிகரிக்கும்.
வேகவைத்த உருளைக்கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கைச் சீவி, தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, உப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வடிகட்டி எடுத்து எண்ணையில் பொரிக்கவும். உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல வெள்ளை நிறமாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது சட்டென நிறம் மாறாமல் இருக்க, சிறிதளவு தண்ணீரில் கடலை மாவைக் கரைத்து, உருளைக்கிழங்கை சீவிப்போட்டு எடுத்து சுத்தமான வெள்ளைத்துணியில் உலர்த்தி எடுக்கலாம்.
எந்த சமையலுக்கும் உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது உப்பு சேர்த்தால் சரியாக வேகாது. வெந்த பின்னரே உப்பு சேர்க்க வேண்டும்.
சட்னியில் உப்பு அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி சட்னியில் போட்டால் உப்பை அது உறிஞ்சிவிடும்.
வேகவைத்து உரித்த உருளைக்கிழங்குடன், வேகவைத்த கொண்டைக்கடலை, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்துச் செய்யும் சுண்டல் சுவையாக இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தும் உருளைக்கிழங்கை, வெங்காயத்துடன் போட்டு வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கு சீக்கிரம் கெட்டுவிடும்.