
பாதாம் முந்திரி மஷ்ரூம் சூப்
தேவையான பொருட்கள்:
1. மஷ்ரூம் 200 கிராம்
2. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் 1½ டேபிள் ஸ்பூன்
3. பூண்டுப் பற்கள் 7
4. வெங்காயம் 1
5. உலர்ந்த மூலிகை இலைக் கலவை (Thyme, Oregano, etc) 1 டீஸ்பூன்
6. முழு முந்திரிப் பருப்பு 10
7. ஆல்மண்ட் (தோலுடன்) 10
8. கருப்பு மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
9. உப்பு தேவையான அளவு
10. வெங்காயத் தாள் நறுக்கியது (Spring Onion) 3 டேபிள் ஸ்பூன்.
11. வெஜிடபிள் ஸ்டாக் (stock) 3 கப்
12. சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்தெடுத்த பிரட் துண்டுகள் தேவையான அளவு.
செய்முறை:
மஷ்ரூம், பூண்டுப் பற்கள், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஆலிவ் ஆயிலை ஊற்றவும். தீயை மிதமாக எரிய விடவும். அதில் பூண்டு வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் பாதாம் முந்திரி சேர்ந்து, அவை சிறிது ரோஸ்ட் ஆகும் வரை வறுக்கவும். பின் அனைத்தையும் கடாயிலிருந்து எடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் நறுக்கிய மஷ்ரூம்களை போட்டு, தேவைப்பட்டால் மேலும் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி, மஷ்ரூமிலிருக்கும் நீர்ச்சத்து குறையும் வரை வதக்கவும்.
பிறகு அதிலிருந்து பாதி அளவு மஷ்ரூம்களை எடுத்து தனியே வைக்கவும். பின் கடாயிலிருக்கும் மீதி மஷ்ரூம்களுடன் பூண்டு வெங்காயம் நட்ஸ் கலவை, மற்றும் மிளகுத் தூள், மூலிகை இலைக் கலவை, உப்பு, தேவையான அளவு வெஜிடபிள் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். கொதி வந்ததும் தீயை அணைத்து விடவும்.
அவை ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்கவும். அரைத்த சூப்பை ஒரு சாஸ்பேனில் (saucepan) ஊற்றி, தனியே பொறித்தெடுத்து வைத்த மஷ்ரூம்களை சேர்க்கவும். சூப் பதத்திற்கு தேவையான மீதமுள்ள வெஜிடபிள் ஸ்டாக் (stock) சேர்த்து கொதி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து அலங்கரிக்கவும். சூப்பை பௌல்களில் ஊற்றி வறுத்த பிரட் துண்டுகளுடன் பரிமாறவும்.
வெஜிடபிள் ஸ்டாக் தயாரிக்கும் முறை: கேரட், செலரி இலைகள், வெங்காயம், முழு பெப்பர் கார்ன்ஸ், தண்டுடன் நறுக்கிய பார்ஸ்லீ, பூண்டு, லவங்கம், பிரிஞ்சி இலைகள் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து 5 கப் தண்ணீர் ஊற்றி வெஜிடபிள்ஸ் நன்கு வேகும்வரை கொதிக்கவைத்து இறக்கவும். அதிலிருந்து நீரைப் பிரித்தெடுத்தால் அதுவே வெஜிடபிள் ஸ்டாக்!
சூடான சுவையான 'பாதாம் முந்திரி மஷ்ரூம் சூப்' ரெடி!