
முதல் நாள் சாப்பாத்தி காய்ந்துபோய் இருந்தால் அதை இட்லிப்பானையில் ஆவியில் இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சாஃப்ட் ஆகிவிடும்.
வத்தக்குழம்பு வைத்து இறக்கும்போது சிறிய துண்டு வெல்லம் போடவும். சுவை அலாதியாய் இருக்கும்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துடன் சிறிதளவு கடலைப்பருப்பைச் சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
இட்லி மல்லிகைப் பூவாய் இருக்க, அரிசியை அரைக்கும் போது ஒரு பிடி ஊறவைத்த ஜவ்வரிசியைப் போட்டு அரைக்கவும். உளுந்தை அரைக்கும்போது அரை ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்து அரைக்கவும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது, ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு மொத்தமாக சாதத்தில் சேர்த்துக் கிளறினால் சுவை ஊரைத்தூக்கும்.
தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் கொட்டினால், வாசனை பிரமாதமாக இருக்கும்.
வெங்காய அடை செய்வதற்கு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது, சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து அதில் போட்டால் ருசியாக இருக்கும்.
மிக்சருக்கு காரம் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கலந்தால் சீராகப் பரவும்.
பலகாரங்கள் செய்யும்போது, முந்திரிப் பருப்புக்கு பதில் முற்றிய தேங்காயைத் துண்டாக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் முந்திரிப்பருப்பு போட்டது போலவே இருக்கும்.
முறுக்கு செய்யும்போது கடலை மாவைக் குறைத்து, பொட்டுக்கடலை மாவைச் சேர்த்தால் மொறு மொறுப்புடன் இருக்கும்.
சீடை, தட்டை எது செய்தாலும் மாவில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்தால் சுவையும், மணமும் கூடும்.