

புதினா சாதம்
தேவை:
பச்சரிசி சாதம் – 2 கப்
புதினா இலை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்
செய்முறை:
புதினா, மிளகாய், இஞ்சி அரைத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி, சில நிமிடங்கள் கழித்து அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து, உப்பு சேர்த்து பிசைந்து பரிமாற, சுவையான புதினா சாதம் ரெடி.
புதினா கொழுக்கட்டை
தேவை:
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 கப்
புதினா இலை – ½ கப்
தேங்காய் – ¼ கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி மாவை நீர் மற்றும் உப்புடன் கொதிக்கவிட்டு, கொழுக்கட்டை மாவு பதத்தில் இறக்கி வைக்கவும். புதினா மற்றும் தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த கொழுக்கட்டை மாவுடன் சேர்த்து உருண்டைகளாக்கி, குக்கரில் இட்லி தட்டில் வைத்து வேகவிடவும். செய்யவும். கமகமக்கும் புதினா கொழுக்கட்டை தயார்.
புதினா தொக்கு
தேவை:
புதினா இலை – 2 கப்
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 சிறு துண்டு
உப்பு – தேவைக்கு
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
செய்முறை:
புதினா இலைகளை நன்றாக கழுவி வடித்து வைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடேற்றி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். புதினா இலைகளை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும், புளி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய் சூடேற்றி, கடுகு, வெந்தயம் தாளித்து, மஞ்சள் தூள் சேர்க்கவும். அரைத்த புதினா கலவையை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை கிளறவும். சுவையான புதினா தொக்கு ரெடி.
இதனை காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்தால் 10–15 நாட்கள் கெடாமல் இருக்கும்.
புதினா பரோட்டா
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
புதினா - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின் பெரிய உருண்டைகளாக எடுத்து திரட்டி இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்க்கவும். புடவை மடிப்புபோல் மடித்து மீண்டும் சுருட்டி வைக்கவும்.
எல்லா மாவையும் இதுபோல் செய்த பின் முதலில் சுருட்டி வைத்த மாவை எடுத்து மீண்டும் சப்பாத்தியாக திரட்டவும். தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் ஒரு ஸ்பூன் கொண்டு நெய் தேய்த்து இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். சுவையான புதினா பரோட்டா தயார்.