

பீட்ரூட் அல்வா
தேவை:
பீட்ரூட் - 1/4 கிலோ.
பால் - 1/4 லி.
சீனி - 150 கிராம்.
பசுநெய் - 50 கிராம்.
ஏலக்காய் - 2.
முந்திரி - 9.
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி, பொடிதாக நறுக்கி, மிக்சியில் சற்று பால் சேர்த்து) அரைத்துக்கொள்ள வேண்டும். சற்று தடிமனான வாணலியை அடுப்பில் வைத்து முக்கால் பங்கு பசுநெய்யை ஊற்றி ஏலக்காய், பொடிதாக நறுக்கப்பட்ட முந்திரியை இட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அரைக்கப்பட்ட பீட்ரூட்டை வாணலியில் இடவும். பின்னர் பாலை வாணலியில் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். வற்றி கெட்டி நிலையை அடைந்ததும் சர்க்கரை விட்டு மீண்டும் கெட்டி நிலையை அடையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.மீதமிருக்கும் பசுநெய்யை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.
பீட்ரூட் வடை
தேவை:
பீட்ரூட் – 2 (சிறியது)
வெங்காயம் – ஒன்று
கடலை பருப்பு – 5 மேசைக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை:
கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து அதனுடன் வர மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர்விடாமல், கொரகொரப்பாக அரைக்கவும்
வெங்காயத்தை பொடியாகவும், பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ளவும். துருவிய பீட்ரூட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.பிசைந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டவும். எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை தயார்.
பீட்ரூட் பொடிமாஸ்
தேவை:
பீட்ரூட் – அரை கிலோ,
மலர வேக வைத்த கடலைப்பருப்பு – அரை கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
பாதாம் – 10,
எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். துருவிய பீட்ரூட், உப்பு, சமையல் மற்றும் மருத்துவம் மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் காய் வேகும் வரை கிளறவும். இதில் மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். பாதாமை வெறும் கடாயில் நன்றாக சிவக்க வறுத்து, பொடித்து சேர்க்கவும். சுவையான பீட்ரூட் பொடிமாஸ் தயார்.
பீட்ரூட் காரசேவ்
தேவை:
பீட்ரூட் - 2
அரிசி மாவு - அரை கப்
கடலை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி அதனை வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலைமாவு மற்றும் ஓமம் உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இத்துடன் வைத்துள்ள பீட்ரூட் விழுதை போட்டு முறுக்கு மாவு பதத்திற்குப் பிசைந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், மாவை அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்க, சுவையான பீட்ரூட் காராசேவ் தயார்.