
1. இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும்.
2. வெயில்காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாகிவிடும்.
3. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவிவிட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
4. காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்கக்கூடாது. ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துக்கள் போய்விடும். காய்கறிகளின் மணமும் போய்விடும்.
5. சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு உருளைக்கிழங்கை அதில் அரிந்து போட்டால் உப்பை எடுத்து விடும்.
6. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
7. பால் காய்ச்சுவதற்கு முன் அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால் பால் பாத்திரம் அடிபிடிப்பதைத் தவிர்க்கலாம்.
8. கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்.
9. தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
10. தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து விடவும். குருமா வாசனையுடன் இருக்கும்.
11. தக்காளி சூப் கெட்டியாக வருவதற்கு தக்காளிப் பழங்களுடன் சில துண்டு பூசணிக்காயை போட்டு வேகவைத்தால் போதும்.
12. இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியாக நெய் விடாமல் பாகுடன் நெய் விட்டால் நெய் நன்றாக கலந்து சுவை நன்றாக இருக்கும்.