மனிதர்கள் முதலில் உணவைப் பச்சையாகத்தான் உண்டார்கள்! கற்கள் மூலம் கனலை உண்டாக்கக் கற்ற பிறகுதான், சமைத்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்! அடுப்பும், நெருப்பும் அவர்கள் அவசியப் பொருளாகி விட்டன!உணவுப் பொருட்களை வேக வைத்துச் சாப்பிட்டால் விரைவில் ஜீரணம் ஆகும் என்பதோடு, அது ஒரு மதிப்புக் கூட்டலாகவும், தற்கால அரசியல்போல் கூட்டணி அமைப்பதிலும் தொடர்கிறது! தனியாக மாங்காய் சாப்பிட்டால் பெரும்பாலும் புளிக்கிறது. அதுவே காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்துடன் கூட்டணி சேர்ந்து மதிப்பைக் கூட்டிக் கொண்டு ஊறுகாய் என்று பெயரையும் மாற்றிக் கொண்டு, சிறப்புப் பெறுகிறது!
நமது மூதாதையர்கள், ஆரம்ப காலத்தில், பெரும்பாலும் உணவுப் பொருட்களை பச்சையாகவே உண்டார்கள். அப்புறம், வேக வைத்து விளாசினார்கள்! இப்பொழுது மீண்டும் பச்சையாக உண்பதே உசிதமென்று ஒரு சாரார் கூற, அதனைப் பின்பற்ற பலரும் முன் வருகிறார்கள்! எல்லாம் அக்கரைப் பச்சை கதைதான் என்றாலுங்கூட, எந்தெந்த உணவுகளை வேக வைத்துச் சாப்பிட வேண்டும், எவ்வெவற்றை அரை வேக்காட்டில் ருசிக்க வேண்டும், எவையெல்லாம் பச்சையாகவே சாப்பிடத் தக்கவை என்றெல்லாம் முன்னோர்கள் வகுத்து வைத்து விட்டுத்தான் சென்றுள்ளார்கள்! என்ன? அவற்றையெல்லாம் அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வமும் இருப்பதில்லை; நேரமும் கிடைப்பதில்லை!
கிராமங்களில் ஒரு பழமொழி இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளது. 'வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தன்னைக்குச் சாகணும்' என்பதே அது!அதிலிருந்து ஒரு படி மேலே போய் எதற்கு வேக வைத்து நேரத்தை வீணாக்க வேண்டும். பச்சையாய்த் தின்றே ஆரோக்கியத்தைப் பெருக்கலாமே என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் மேலோங்கி வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நமது டிஷ் நிச்சயம் பிடிக்கும்.
இதில், எவற்றையைல்லாம் பச்சையாகவே சாப்பிட்டால் நல்லது என்று கூறுகிறார்களோ, அவற்றை நாம் அப்படியே உபயோகித்து டிஷ்ஷைச் செய்யலாம்! சரி! வாங்க கிச்சனுக்குப் போவோம்! ஓ! ஐ ஆம் சாரி! நமக்குத்தான் அடுப்பு, நெருப்பு எதுவும் தேவையில்லையே! அப்புறம் கிச்சனுக்கு எதற்கு? நாம ஹால்ல அமர்ந்தே வேலையை ஆரம்பிப்போம்! தேவையான பொருட்கள் இவைதாங்க!
தேங்காய் - ஒரு மூடி
சின்ன (சாம்பார்) வெங்காயம் -10-12
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பச்சை/காய்ந்த மிளகாய் -4
உப்பு - தேவைக்கேற்ற அளவு
தேங்காய் மூடியை நன்கு துருவிக் கொள்வோம். வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்வோம். புளியைக் கரைத்துக் கொள்வோம் - சற்றே கெட்டியாக. மிளகாயைப் பொடியாய் நறுக்கிக் கொள்வோம். சிறிய பேஸினில் துருவிய தேங்காயைக் கொட்டி, அதன் மேல் அரிந்த வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும், உப்பையும் போட்டுக்கொள்வோம்! கரைத்த புளியை அவற்றின் மீது ஊற்றி, எல்லாம் ஒன்றாகச் சேருமாறு நன்றாகப் பிசைந்துவிட வேண்டும். கரண்டியால் நன்கு கலந்தும் அமுக்கலாம். கைகளால் பிசைவதே உசிதம்!அப்பொழுதுதான் கூட்டணி உறுதிப்படும். நன்றாகப் பிசைந்து 5-10 நிமிட நேரம் கழித்துப் பரிமாறலாம்!
அனைத்து வெரைட்டி ரைசுக்கும் சைடாகும் இது! பழைய சாதத்துக்குநெருங்கிய தோஸ்த்து! இட்லி, தோசை, பூரி,சப்பாத்திக்கும், நல்ல கம்பனி கொடுக்கும்! அந்தக் காலத்து ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் ‘நான் அப்படியே சாப்பிடுவேன்!’ என்பதைப் போல, எமக்கு இதை அப்படியே சாப்பிடப் பிடிக்கும்! ஓ! பெயரை மறந்து விட்டோமோ! COTS-காட்ஸ் என்று வேண்டுமானால் பெயர் வைத்துக் கொள்வோமே!(C for coconut & chillies; O for onion; T for tamarind and S for salt) சுவைத்து விட்டுக் கூறுங்கள்!