வெல்லச்சீடை மிருதுவாக தயாரிக்க...
வெடிகுண்டு போல் அல்லாமல் மிருதுவான வெல்லசீடைக்கு நீங்கள் மாவை நன்கு சிவக்க வறுத்து ஆறிய பிறகு அதில் வெது வெதுப்பான நீர் விட்டுப் பிசைந்து பின் வெல்லப்பாகு சேர்த்து தயாரிக்க சீடை மிருதுவாக வரும்.
நீங்கள் எந்த உப்பு பட்சணம் செய்வதாக இருந்தாலும் வெண்ணையை அப்படியே சேர்க்காமல் பாத்திரத்தில் வெண்ணை உப்பு இரண்டையும் நன்றாக நுரைத்து கலக்கிய பின் மாவைச்சேர்த்து பலகாரம் தயாரிக்க கர கரவென்று இருக்கும்.
உப்பு சீடைக்கு அரிசிமாவை இலேசாக வாணலியில் வறுத்து பிறகு உபயோகிக்க அது வெடிக்காது.
உளுத்தம் மாவை கல் இல்லாமல் அரைத்து வைக்கவும். சிறு கல் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
சுகியனுக்கு மைதாவை கரைத்து தோய்ப்பதை விட வடைக்கு அரைக்கும் மாவை உப்பு போடாமல் எடுத்து வைத்து அதில் தோய்த்து சுகியன் போட சுவையாக இருக்கும்.
ரவை பயத்தமாவு உருண்டை செய்ய மாவுடன் பால் பௌடர் சேர்க்க சுவை கூடும்.
முந்திரி பருப்பை அரைத்து பௌடராக்கி பிறகு பால் சேர்த்து அரைக்க நன்கு மையாக ஆகும். பிறகு கேக் தயாரிக்கலாம்.
தேங்காய் பர்பி தயாரிக்கும்போது மில்க் மெயிடு இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்க்க சுவையாக இருக்கும்.
துருவிய தேங்காயை பால்விட்டு அரைத்து பர்பி செய்ய சுவையாக இருக்கும்.
அப்பம் தயாரிக்க வெல்லத்தை அடுப்பில் கரையவைத்து வடிகட்டி மாவில் சேர்த்து அப்பம் வார்க்க அப்பம் மிருதுவாக இருக்கும்.
கோதுமை மாவில் அப்பம் தயாரிக்க சுவையாக இருக்கும்.
போளி சுவையாக இருக்க…
வேகவைத்த கடலைபருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் துருவலை வாணலியில் 5 நிமிடம் கிளறி பிறகு அரைத்து போளி தயாரிக்க மிகச் சுவையாக இருக்கும்.
உப்பு பலகாரங்கள் வெண்ணை சேர்க்க விரும்பாதவர்கள் கடலெண்ணையை நன்கு காய்ச்சி (3டேபிள் ஸ்பூன்) பிறகு மாவில் சேர்க்க பலகாரம் கரகரப்பாக கரையும்.
கடலைமாவை நெய்யில் நன்கு வதக்கி பால் சேர்த்து பாயசம் செய்ய மிகச் சுவையாக இருக்கும்.
திடீர் பாயசம்
சாதத்தை நன்கு அரைத்து பால் சீனி சேர்த்து சுலபமாக பாயசம் தயாரிக்கலாம்.